ஈரானிய எண்ணெயை ஏற்றிய இரண்டு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. LSEG-இன் கப்பல் கண்காணிப்புத் தரவுகளில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கை பயன்படுத்தி, உள்ளூர் சுத்திகரிப்பு ஆலைகள் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளன.
ஈரான் கொடியை ஏந்திய ஃபெலிசிட்டி கப்பல் மேற்கு இந்தியாவில் உள்ள சிக்கா துறைமுகத்தை அடைந்துள்ளது என்றும், குராசோ கொடியை ஏந்திய ஜயா கப்பல் கிழக்கு இந்தியாவிலுள்ள ஒடிசா துறைமுகத்தில் உள்ளது என்றும் தரவுகள் காட்டுகின்றன.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும் நுகர்வோருமான இந்தியா, ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என்ற அமெரிக்க அழுத்தத்திற்குப் பிறகு, மே 2019 முதல் அந்நாட்டிடமிருந்து எந்த சரக்கையும் பெறவில்லை.
நாட்டின் முன்னணி சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அமெரிக்க தடைகளுக்கு உள்ளான ‘ஜயா’ என்ற கப்பலில் ஏற்றப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
