மதுரை: “திருப்பரங்குன்றத்தில் முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்; மக்களின் வாழ்க்கையும் உயரும்,” என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேசியது, தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. இதுகுறித்து, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகின்றனர். தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக மவுனமாக உள்ளனர். திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து, அத்தொகுதியில் பிரேமலதா பேசியதாவது:
திருப்பரங்குன்றத்தில் தான் விஜயகாந்த் கட்சியை தொடங்கினார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றித்தான் பேசுகின்றனரே தவிர, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் பேசவில்லை. மக்கள் நன்றாக இருந்தால் தான் தொகுதி நன்றாக இருக்கும். முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.
சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரேமலதா போதை கலாசாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், மீண்டும் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க.,வின் நிலைப்பாட்டிற்கு எதிராக பேசியது, அக்கட்சியினருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
