சென்னை: போலீசாரின் அனுமதியை மீறி,’ரோடு ஷோ’ நடத்தியதால், த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் மீது, வேப்பேரி, நுங்கம்பாக்கம், மாம்பலம் காவல் நிலையங்களில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியை மீறி த.வெ.க., தலைவர் விஜய், சென்னை தி.நகர், எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர்கள் ஆனந்த், ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, நேற்று முன்தினம் பிரசாரம் செய்ய, போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.
அவர் அனுமதியை மீறி, தி.நகர் தெற்கு போக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர்கோட்டம் பகுதியிலும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்.
எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பேரி ரித்தர்டன் சாலையில் பிரசாரம் செய்ய, போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். ஆனால், அவர் அந்த இடத்தில் பிரசாரம் செய்வதை ரத்து செய்துவிட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோடு ஷோ நடத்தி, விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்.
கட்சி வேட்பாளர்களுடன், அவர் சென்ற இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
கீழ்ப்படியாமல் இது தொடர்பாக மாம்பலம், நுங்கம்பாக்கம் மற்றும் வேப்பேரி காவல் நிலையங்களில், தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அரசு அதிகாரிகளின் சட்ட ரீதியான உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் நடத்தல், மற்றவர்களின் உயிருக்கு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று காவல் நிலையங்களிலும், விஜய் மற்றும் த.வெ.க., வேட்பாளர்களான ஆனந்த், ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் த.வெ.க., மாவட்டச்செயலர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
