புதுடில்லி: டில்லியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி

புதுடில்லி: டில்லியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 40, வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றப்பத்திரிகை

டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டி, 2020ல், 200 கோடி ரூபாய் பறித்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்தது. இது தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால், பிங்கி இரானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டில்லியில் உள்ள ரோஹிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் காதலி எனக் கூறி வருகிறார். சிறையில் இருந்தபடியே அவருக்கு பல கடிதங்களையும் எழுதி உள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

அமலாக்கத் துறை விசாரணையில், மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள், ஆடைகள், வாகனங்களை சுகேஷ் சந்திரசேகர் வாங்கி தந்தது தெரிய வந்தது.

அவர் கைதான பின், தன் மொபைல் போனில் இருந்த தரவுகளை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அழித்ததையும், நிதி பரிவர்த்தனைகளை மறைத்ததையும் அமலாக்கத் துறை கண்டுபிடித்தது.

இந்த வழக்கு தொடர்பாக, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், 2022 ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத் துறை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கூட்டு குற்றவாளியாக சேர்த்தது. குற்றச் சாட்டுகளை மறுத்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், அரசு அதிகாரி எனக் கூறி சுகேஷ் சந்திசேகர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது குற்ற செயல்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

தள்ளுபடி

இந்த வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, 2025 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த பண மோசடி வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத் துறையிடம் முறையாக கோரிக்கை வைக்கும்படி, அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நடைமுறை என்ன?

சட்ட நடைமுறைகளின்படி, அரசு தரப்பு சாட்சியாக மாறுவது குறித்து, முதலில் விசாரணை அமைப்பான அமலாக்கத் துறையிடம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு அளிக்க வேண்டும். அமலாக்கத் துறை அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த பின், ஜாக்குலினை அரசு தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.
நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் குறைக்கப்படலாம் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படலாம்.

Source link