புதுடில்லி: ஈட்டி எறிதல் பயிற்சியாளர் மீது, நீரஜ் சோப்ரா, சுமித் அன்டில் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நாவல் சிங். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றுள்ளார். சச்சின் யாதவ், பாராலிம்பிக் சாம்பியன் நவ்தீப்பிற்கு ஆலோசகராக உள்ளார்.
இவர் மீது டோக்கியோ, பாரிஸ் என பாராலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற சுமித் அன்டில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (எஸ்.ஏ.ஐ.,) அவர் எழுதிய கடிதம்:
பயிற்சியாளர் நாவல் சிங் குடித்து விட்டு எங்களையும், குடும்பத்தினரையும் அவதுாறாக பேசி, குரல் பதிவுகளை அனுப்புகிறார். மனதளவில் தொடர்ந்து தொல்லை தருகிறார். நீரஜ் சோப்ரா, நவ்தீப் உள்ளிட்ட பலரையும் மரியாதை குறைவாக பேசுகிறார். எஸ்.ஏ.ஐ., சார்பில் முதலில் சமரசம் செய்ய முயன்றனர். இம்முறை அவரை விடப் போவதில்லை. என்னைப் போல பலர் வேதனையுடன் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நீரஜ் புகார்
இதுகுறித்து, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, எஸ்.ஏ.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,’என்னையும், குடும்பத்தினரையும், சக விளையாட்டு நட்சத்திரங்களையும், கண்ணியத்தை மீறி, மனிதத்தன்மை இல்லாமல், தகாத முறையில் பேசுகிறார். இது மிகவும் அதிர்ச்சி தருகிறது. அதிகாரத்தில் உள்ள ஒருவரது செயலால், ஒட்டுமொத்த விளையாட்டு அமைப்புக்கும் அவப்பெயர் கிடைத்துள்ளது. நாவல் சிங் மீது கண்டிப்பான நடவடிக்கை தேவை,’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்
முன்னதாக, பாரா குண்டு எறிதல் முன்னாள் வீராங்கனை தீபா மாலிக், கடந்த 2012 பாராலிம்பிக், 2014 ஆசிய விளையாட்டிற்கான பயிற்சிகளுக்கு, நாவல் சிங் தொடர்ந்து தொல்லை தந்துள்ளார். இதனால் 2014ல் இவரிடம் பயிற்சி பெறுவதை நிறுத்தினார் தீபா மாலிக்.
