சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கோவையில் இன்று(ஏப்.,18) பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் வரும், 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கடந்த 15ம் தேதி நாகர்கோவிலில், ‘ரோடு ஷோ’ வாயிலாக பிரசாரம் செய்தார். இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையில் இன்று மாலை பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., – பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில், பழனிசாமி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிர்த்திகாவை ஆதரித்து, நாளை பிரசாரம் செய்கிறார். நாளை மாலை, சென்னை மயிலாப்பூரில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, ‘ரோடு ஷோ’ வாயிலாக பிரசாரம் செய்கிறார்.
