நாசிக் போலி சாமியாரின் நெருங்கிய உதவியாளர், மனைவியுடன் விபத்தில் பலி; சதி செயல் என பரபரப்பு குற்றச்சாட்டு

நாசிக்

மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (வயது 67) ஜோதிடர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர் உயிரிழந்து விடுவர் என மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருடைய நெருங்கிய உதவியாளர் ஜிதேந்திர ஷெல்கே (வயது 50). ஷெல்கேவின் மனைவி அனுராதா (வயது 45). இந்த நிலையில், இந்த தம்பதி மற்றும் அவர்களுடைய மகன் சுஜித் (வயது 14) ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடைய கார், சத்ரபதி சாம்பாஜி நகரில் இருந்து புறப்பட்டு அகல்யாநகர் மாவட்டத்தின் கொபர்காவன் பகுதியில் சென்றபோது, முன்னே லாரி ஒன்று மெதுவாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், லாரியின் பின்னால் கார் மோதி விபத்தில் சிக்கியது.

இதில், கார் முற்றிலும் சேதமடைந்தது. காரை ஓட்டிய ஷெல்கே சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய மனைவியும், மகனும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், ஷெல்கேவின் மனைவியும் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். சுஜித் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அசோக் காரத்தின் தொழில் கூட்டாளியாகவும், காரத் அமைத்த ஷிவானிகா அறக்கட்டளையின் துணை தலைவராகவும் ஷெல்கே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடைய மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் சதி செயல் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவார் வெளியிட்ட செய்தியில், விபத்தில் சிக்கி ஷெல்கே மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்து திட்டமிட்டு நடந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.

இதனால், காரத்தின் மற்ற தவறான விசயங்கள் வெளிச்சத்திற்கு வராமல் தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் விபத்து நடந்திருக்க கூடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர்களில் ஒருவரான சுஷ்மா அந்தாரேவும், இதனை நம்ப முடியவில்லை என கூறியுள்ளதுடன், காரத் வழக்குடன் தொடர்புடையவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட கூடும் என சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. அந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சம்பவம் நடந்துள்ளது என கூறினார்.

சமூக ஆர்வலர் அஞ்சலி கூறும்போது, 3 நாட்களுக்கு முன்பு அமலாக்க துறை விசாரணை நடந்த நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்து இருக்கிறார். ஷிவானிகா அறக்கட்டளையின் துணை தலைவரான அவருடைய மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Source link