லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லெபனான்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை திறந்து விடுவதாக ஈரான் தெரிவித்தது. எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் அறிவித்தது. இதனால் உலக நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்தன. விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு முடிவுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கு ஈரான் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை அமெரிக்கா முற்றுகையிடுவதுதான் காரணம் என்கிறது ஈரான்.
வெள்ளிக்கிழமை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் அமெரிக்காவுடன் முழுமையான போர் ஒப்பந்த உடன்படிக்கைக்கு வரும் வரை, அமெரிக்கா முழு சக்தியுடன் தொடர்ந்து ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை முற்றுகையிடும் எனக் கூறியிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஈரான், மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக தெரிவித்துள்ளது. ஏறக்குறைய உலகின் 5-ல் ஒரு பகுதி எண்ணெய் போக்குவரத்து இந்த ஹார்முஸ் மூலமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக உலக பொருளாதாரத்தில் எரிசக்தி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையில் ஒப்பந்தம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், நேற்று எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. ஆனால், ஈரான் தற்போது புதிய மிரட்டல் விடுத்துள்ளது மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
