மோடி, அமித்ஷா கனவு ஒருபோதும் பலிக்காது.. முதல்வர் பெயரை சொல்லி ராகுல் காந்தி உறுதி – cm mk stalin cannot be intimidated rahul gandhi speech at trichy campaign

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே மீதமுள்ள நிலையில் யார் இந்த தடவை வெற்றி வாகை சூட போகிறார்? எந்த கட்சிக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் விவாதங்கள் துவங்கியுள்ளது. இதனிடையில் அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரைகளும் தீவிரமடைய துவங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.

ராகுல் காந்தி பரப்புரை
சட்டமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருகை தருவாரா, இல்லையா என்பது இந்தியா கூட்டணி கட்சியினர் இடையிலே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. அதோடு எதிர்கட்சியினரும் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை ராகுல் காந்தியே விரும்பவில்லை. அதனால் தான் அவர் பிரச்சாரத்துக்கு தமிழகம் வரவில்லை என விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் காந்தி இன்று தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.

திருச்சி துறைமுகம்
முன்னதாக பொன்னேரி, சோளிங்கர் தொகுதியில் அவர் பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது திருச்சி துறையூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில் பொம்மை கட்சியாகவும், பாஜகவின் முகமூடியாகவும் அதிமுக உள்ளது. இவர்கள் வழியில் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைவதற்கு பாஜகவும், ஆர்எஸ்எஸும் திட்டமிடுகிறார்கள். பாஜகவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக சரணடைந்துள்ளனர்.

கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள மாட்டார் மு.க. ஸ்டாலின்
ஐடி ரெய்டு, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் மிரட்டப்படுகிறார்கள். பாஜகவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பணிய வைக்கவோ, மிரட்டவோ முடியாது என்பது நன்றாக தெரியும். தன்னுடைய கொள்கைகளை அவர் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். பாஜகவுக்கு இது நன்றாக தெரியும். தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டலாம் என்று மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒருபோதும் நடக்காது. பலிக்காது.

தமிழ்நாட்டின் சிப்பாய் போன்று பணியாற்றுவேன்
தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிப்பதற்கு அவர்களை ஒருபோதும் இங்கு அனுமதிக்க இயலாது. எனக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவை ஒரு நாளும் அவர்களால் குலைக்க முடியாது. அரசியல் உறவு கிடையாது இது. அன்பின் உறவு. டெல்லியில் தமிழ்நாட்டின் சிப்பாய் போன்று செயல்படுவேன். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக என்ன நடந்தாலும் போராடுவேன். டெல்லியில் தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்திற்காகவும் போராடுவேன் என தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

தொகுதி மறுவரையறை மசோதா
மேலும், தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் திருச்சி பரப்புரையில் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் குரல் ஒலிக்கக் கூடாது என்று தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர முயன்றார்கள். அதனை நாம் தோல்வி அடைய செய்திருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ். பாரதி அளித்த விளக்கம்
ராகுல் காந்தியின் வருகையும், அவரின் பரப்புரையும் திமுக கூட்டணிக்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. அதே நேரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரும் இணைந்து பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பில்லை என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே முடிவு செய்யப்பட பயணத்திட்டத்தை மாற்றினால் பல பிரச்சாரங்கள் பாதிக்கப்படும். எனவே ராகுல் காந்தி ஒருப்பக்கமும், முதல்வர் மற்றொரு பக்கமும் பரப்புரை செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link