திமுக கூட்டணியில் தேமுதிக
பிரேமலதா விஜயகாந்த் எந்த கூட்டணியில் இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக கூட்டணியும் அவருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கி மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் தந்தது.
இருப்பினும் கிட்டத்தட்ட 23 கூட்டணி கட்சிகளுடன் திமுக தனது கூட்டணியை இறுதி செய்தது. அந்த வகையில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்தது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில்தான் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “என் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் திமுக ஆட்சி மீது சொல்ல முடியாது”என ஒரே போடாக போட்டுவிட்டார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின், கமல் உள்ளிட்ட மற்ற திமுக தலைவர்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகினர்.
திருப்பரங்குன்றம்
இது இப்படி இருக்கவே கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற கலாச்சார மற்றும் மத ரீதியான மிக முக்கியமான ஒரு பிரச்சனையில் என்றால் அது திருப்பரங்குன்றம் தான். திமுக திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து மிக முக்கியமான பாஜகவின் அரசியல் நகர்வை முறியடித்தது.
பிரேமலதா முன்னால் இருக்கும் வாய்ப்புகள்!
இந்த சூழலில் நேற்றைய தினம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “மக்கள் திருப்பரங்குன்றம் மலை மீது சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். திருப்பரங்குன்றத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என பேசுகிறார்களே தவிர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை யாருமே பேசவில்லை. முருகன் அருளால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும்” என பேசி இருக்கிறார்.
பிரேமலதாவின் இந்த பேச்சு முழுக்க முழுக்க திமுக நிலைப்பாட்டிற்கு எதிரான ஒரு பேச்சாக கருதப்படுகிறது. இப்படியாக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவுக்கு எதிரான பேச்சுக்களை பொதுவெளியில் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருவது திமுக நிர்வாகிகளிடையே பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு பிரேமலதாவின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திமுகவின் “துரந்தர் பிரேமலதா தான்” என இணையவாசிகள் ‘மீம்களை’ போட்டு தள்ளிக் கொண்டிருக்கின்றனர். மேலும் வட சென்னை படத்தில் வரக்கூடிய ஆண்ட்ரியா கதாபாத்திரத்தை பிரேமலதாவுடன் ஒப்பிட்டு மீம்களைப் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சுந்தர் சி பாராட்டு
இதற்கிடையில் பிரேமலதாவின் பேச்சு குறித்து அதிமுக மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி -யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “தமிழ்நாட்டின் தைரியமிக்க வீரப் பெண்மணி பிரேமலதா தான். அண்ணி திமுக கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அண்ணா திமுகவிற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
நாங்கள் கூற வேண்டிய குற்றச்சாட்டுகளை முதல்வர் முன்னிலையில் அவர் கூறிக் கொண்டிருக்கிறார். என பேசியுள்ளார். தேர்தல் சமயம் என்பதால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை.
