கோவை: தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நடப்பது தான் இந்த தேர்தல் என்று

கோவை: தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நடப்பது தான் இந்த தேர்தல் என்று கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.

அவர் பேசியதாவது:

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே, இன்று கோவை நகரை திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நடப்பது தான் இந்த தேர்தல். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல். தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்று தான் எம்ஜிஆர் அதிமுகவை துவங்கினார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். அதேபோல, பிரதமர் மோடி இன்று உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் அளவுக்கு உயர்த்தி பிடித்திருக்கிறார்.

எத்தனையோ பிரதமர்கள் நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்திய நாட்டிற்கு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, பெருமையை தேடித் தந்துள்ளார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் பிரதமர் மோடி.

நமது கூட்டணி இயற்கையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகளாகிறது. சுமார் 5 லட்சம் கோடி கடன் பெற்று, அதிக கடன் மாநிலம் என்ற சாதனையைத் தான் தமிழகம் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெற்றது. இதனால், முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.

அதிமுகவின் கோரிக்கையை ஏற்று நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு ரூ.11,600 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முடக்கி வைத்துள்ளார். ஆனால், மத்திய அரசு எந்த நிதியும், திட்டத்தையும் கொடுக்கவில்லை என்று பொய் பிரசாரம் செய்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரியில் 23 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெற்றோம். தற்போதும், அதே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். கோவை அதிமுகவின் கோட்டை. ஒரு இடம் கூட திமுகவுக்கு கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

நீலகிரி, திருப்பூருக்கு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வர முடிந்ததா? கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதிமுக ஆட்சியிலேயே இடத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால், தற்போது வரை அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை.

தமிழகத்தில் கஞ்சா விற்காத இடமே இல்லை. பெண்கள் மட்டுமல்ல, பாட்டிகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சியமைந்த 3 மாதத்திற்கு கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஒழிப்போம். தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம். மக்கள் என்ன எண்ணுகிறார்கள், அந்த எண்ணப்படி மத்திய அரசிடம் தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெற்று, தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம், இவ்வாறு அவர் கூறினார்.

Source link