செம்பாக்கத்தில் வீட்டின் முன் வரையப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் ‘விசில்’ கோலத்தை மாநகராட்சி ஊழியர் அழித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சம்பவம் என்ன?
செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில், குடியிருப்புவாசி ஒருவர் தனது வீட்டின் வாசலில் விசில் சின்னம் மற்றும் தமிழக வெற்றி கழகம் (TVK) என்ற பெயருடன் கோலம் வரைந்திருந்தார். இதைக் கவனித்த மாநகராட்சி ஊழியர் ஒருவர் கோலத்தை அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. வீட்டு உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், மாநகராட்சி ஊழியர் ஒருவரே வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பெரிய கோலத்தை முழுவதுமாக அழித்தார். இது தொடர்பான வீடியோவை அப்பகுதியினர் படம்பிடித்து வெளியிட, அது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது.
சர்ச்சைக்கான பின்னணி
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ (Whistle) சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் சின்னமான ‘விசில்’ மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு நூதனமான வழியைத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக, கட்சியின் பெண் தொண்டர்கள் மற்றும் தாய்மார்கள் தங்கள் வீடுகளின் வாசலில் கட்சியின் பெயரையும், விசில் சின்னத்தையும் கோலமாக வரைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எளிமையான முறையில் கட்சியின் அடையாளத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வதே அவரது திட்டமாக இருந்தது. விஜய்யின் இந்த அழைப்பை ஏற்றே, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் ஆர்வத்துடன் தங்கள் வீடுகளின் முன் விசில் கோலங்களை வரைந்து வருகின்றனர், அதன் ஒரு பகுதியாகவே செம்பாக்கம் சம்பவமும் அமைந்தது
