சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளன்று சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக சென்னை மாவட்டத்தின் சார்பில் இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகளைப் பெற Saksham App மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 1800-425-7012 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேர்தல் நாளான வருகின்ற ஏப்ரல் 23 அன்று சென்னை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று தங்களது வாக்கினைச் செலுத்துவதற்கு ஏதுவாக, இலவச வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச வாகன சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த வாக்காளர்கள் Saksham App மூலமாகவும், மாவட்ட தகவல் மையத் தொடர்பு எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 1800-425-7012, மாற்றுத் திறனாளி நல அலுவலர் (சென்னை வடக்கு) பி.சரவண குமார் செல்பேசி எண்: 94439 68097, மாற்றுத் திறனாளி நல அலுவலர் (சென்னை தெற்கு) சீனிவாசன் செல்பேசி எண்: 98416 96693 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
