கோவை: கோவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நேர்மையாளர், கடின உழைப்பாளி என்று புகழாரம் சூட்டினார்.
கோவையில் இன்று (ஏப்.,18) தேஜ கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில், ஒரே குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் குடும்பத்தில், மகன், மருமகனுக்கு இடையே கொள்ளையடிப்பதில் போட்டி என்றும், எல்லா பதவிகளும் ஒரே குடும்பத்தினரிடம் இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் கட்சியிலும், மகன், மருமகன் ஆதிக்கம் இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், பாஜ கட்சியின் செயல்பாட்டில் இருக்கும் வித்தியாத்தை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை உதாரணமாக காட்டி பேசினார்.
பிரதமர் பேசியதாவது:கோவையின் மண்ணின் மைந்தன் சி.பி. ராதாகிருஷ்ணன் தான் பாஜவின் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு. அவருக்கு அரசியல் பின்புலம் கிடையாது. நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றால் உயர்ந்த நிலைக்கு வந்தவர். கயிறு வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தபோது, நாட்டின் கயிறு ஏற்றுமதியை சாதனை அளவுக்கு கொண்டு சென்றார். அவர் தான் இப்போது நமது துணை ஜனாதிபதி. எந்த பின்புலமும் இல்லாதவரும் தன் உழைப்பால் உயர் பதவிக்கு வர முடியும் என்பது தான் பாஜ.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
