திருப்பூர்: ‘சொல்வதற்கு சாதனைகள் ஏதும் இல்லாததால், இபிஎஸ் அசிங்கமாக பேசுகிறார். சாபம் விடுகிறார். சுயநலத்திற்காக தமிழக உரிமைகளை காவு கொடுக்க துணிந்த இபிஎஸ்க்கு 11வது தோல்வியை மக்கள் கொடுக்க வேண்டும்,’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; தொகுதி மறுவரையறை எனும் பேராபத்தை 2023ல் உணர்ந்து, நாட்டிலேயே முதன்முறையாக எதிர்க்கத் துவங்கியது திமுக தான். இதனால் பாதிக்கப்படக் கூடிய மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களை அழைத்து, சென்னையில் ஆலோசித்து தீர்மானத்தை நிறைவேற்றினோம். இதற்காக ஒரு நடவடிக்கை கூட்டுக் குழு அமைத்தோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை போட்டோம். ஏன், சட்டசபையிலும் தீர்மானம் போட்டோம்.
அப்போது, இரட்டை நாக்கு கொண்ட அதிமுக, சட்டசபையில் ஒரு விதமாகவும், வெளியே ஒரு விதமாகவும் பேசுகிறார்கள். பார்லி தேர்தலுக்காகத் தான் திமுக நாடகம் போடுவதாக நா கூசாமல் சொன்னார்கள். 3 நாட்களுக்கு முன் இந்த மசோதா வந்தவுடன் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தினோம். அந்த சட்ட மசோதா நகலை எரித்தோம். நாமக்கல்லில் பற்ற வைத்த தீ நாடு முழுவதும் பரவியது. அதனுடைய வெப்பம், பார்லியில் அந்த சதித்திட்டத்தை சாம்பலாக்கியது.
மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பாக செய்யும் என்று அதிமுக சொல்கிறது. இப்படி சொந்த மாநிலத்திற்கு எதிராக நடக்கும் இபிஎஸின் அதிமுகவைப் போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் அதிமுக. அடிமைகளிடம் தமிழகம் மறுபடியும் சிக்கலாமா? அப்படி சிக்கினால், தமிழகம் தமிழகமா இருக்காது. அதனை தடுக்க வேண்டும்.
தமிழகத்தை அடிமை அதிமுகவிடம் இருந்தும், மதவாத பாஜவிடம் இருந்து நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சியால் திருப்பூர் வளர்ச்சியடைந்துள்ளதை நீங்கள் கண்கூடப் பார்க்கிறீர்கள். இதுபோன்ற சாதனைகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்துள்ளார்களா? இல்லவே இல்லை. அவர்களால் நீங்க பட்ட சோதனைகள் ஒன்றா? ரெண்டா?
மத்திய அரசின் நடவடிக்கைகளினால் திருப்பூர் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. இதுபற்றி அவர்களுக்கு துளியும் கவலையில்லை. தொழில்வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களை மிரட்டுகிறார்கள். இதையெல்லாம் செய்தவர்கள் தான் விதவிதமாக பொய்களை சொல்லி ஓட்டு கேட்க வருகிறார்கள். திமுக ஒரு திட்டத்தை செயல்படுத்தினால், அது சாதனை திட்டமாகத்தான் இருக்கும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக தான் OG (Original). திமுகவின் சாதனைகளை சொல்லவே தனி மாநாடு போட வேண்டும்.
இப்படி கொள்கையும், சாதனையும் இல்லாத இபிஎஸ், அவதூறாக பேசுவதை இபிஎஸ் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சொல்வதற்கு சாதனைகள் ஏதும் இல்லாததால், இபிஎஸ் அசிங்கமாக பேசுகிறார். சாபம் விடுகிறார். சுயநலத்திற்காக தமிழக உரிமைகளை காவு கொடுக்க துணிந்த இபிஎஸ்க்கு 11வது தோல்வியை மக்கள் கொடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
