குருகிராம்: கடுமையான நரம்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவன், சி.பி.எஸ்.இ., எனப்படும்

குருகிராம்: கடுமையான நரம்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவன், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 95.4 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிப்பவர் சுஷில் திவாரி. இவரது மகன் சாத்விக் திவாரி. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நரம்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் நான்கு மாதங்கள் வென்டிலேட்டரில், முற்றிலும் அசையாமல் இருந்தான். தீவிர சிகிச்சைக்குப் பின், உடலை அசைப்பது முதல் சாதாரணமாக சுவாசிப்பது வரை அனைத்தையும் அவன் புதிதாகக் கற்றுக்கொண்டான்.

இன்றும் சாத்விக், பாதப் பாதுகாப்புக் கருவி உதவியுடன் நடக்கிறான். சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பிரச்னைகளை சமாளிக்க தீவிரமான பயிற்சி செய்தான். இதற்கிடையில் கல்வியையும் அவன் நிறுத்தவில்லை.

இந்த ஆண்டு நடந்த சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற சாத்விக் திவாரி, 95.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளான்.

சுஷீல் திவாரி கூறுகையில், “எந்தப் பிரச்னையில் இருந்தும் மீள்வதற்கு, மன உறுதிக்கும் என் மகன் சாத்விக் ஒரு உதாரணமாக திகழ்கிறான். வாழ்க்கையில் போராட்டத்தை எதிர்கொள்ளும் மற்ற மாணவர்களுக்கு சாத்விக், நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பான்,”என்றார் பெருமிதத்துடன்.

Source link