மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்

கிருஷ்ணகிரி: ”முதல்வர் ஸ்டாலின் முன், மாட்டை நிறுத்தினால், கொம்பில் இருந்து பால் வருகிறதா; காம்பில் இருந்து வருகிறதா என்று கூட அவருக்கு தெரியாது,” என்று, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் நடந்த பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன. உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது தான் ஒரு அரசின் கடமை. அதன் பின் தான், வளர்ச்சியை பற்றி யோசிக்க வேண்டும். தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கை நாசப்படுத்தி விட்டனர். இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் மாற்றமில்லை.

விவசாயிகள் பிரச்னை பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும், முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? எதுவுமே தெரியாமல், முதல்வராக ஐந்து ஆண்டுகளை ஓட்டி விட்டார். ஸ்டாலின் முன், பசு மாட்டை நிறுத்தி, ‘கொம்பில் இருந்து பால் வருகிறதா; காம்பில் இருந்து பால் வருகிறதா’ என கேட்டால் பதில் தெரியாது. ‘குட்டி இங்கிலாந்து’ எனப்படும் தளி தொகுதியை, தற்போதைய கம்யூ., எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் குட்டிச்சுவராக வைத்துள்ளார். அவர் மீது, இரண்டு கொலை, நான்கு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

ரியல் எஸ்டேட் தொழிலுக்காக, இப்பகுதி மக்களின் சொத்தை எல்லாம் எழுதி வாங்கியுள்ளார். அவரது வேட்புமனுவில், மூன்று பக்கத்திற்கு குற்றங்கள் உள்ளன. தி.மு.க.,வை பொறுத்தவரை, வளர்ச்சி வரக்கூடாது என்பதற்காக, மத்திய அரசிற்கு விரிவான திட்ட அறிக்கையை தவறாக கொடுப்பர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஓசூர் விமான நிலையம், மெட்ரோ விரிவாக்க திட்டம் ஆகியவற்றை, மத்திய அரசிடம் பேசி செயல்படுத்துவோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Source link