'கவர்னர் வேலைக்கு பழனிசாமி போகலாம்': கனிமொழி

விருத்தாசலம்: ”தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கவர்னராக வேலைக்கு போகலாம்,” என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசினார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை ஆதரித்து, அவர் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலினின் மற்றொரு சகோதரி பிரேமலதா. விஜயகாந்த் போலவே எந்த கருத்தாக இருந்தாலும் பயமின்றி எடுத்து சொல்வார்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால், தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மோடியின் மசோதாவை தோற்கடித்தோம். இது அவர்களுக்கான தோல்வியின் முதற்கட்டம். அடுத்து நாடு முழுவதும் தோல்வியே தொடரும்.

தமிழகத்திற்கும் உரிமை வேண்டும். இதற்காகவே லோக்சபாவில் சரியான பாடத்தை சொல்லித் தந்துள்ளோம். இந்த தேர்தலிலும் சரியான பாடத்தை சொல்லித் தர வேண்டும்.

பழனிசாமி தமிழகத்தை பற்றி கவலைப்படாமல், தன்னை காப்பாற்றினால் போதும் என மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுப்பார். தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.,வின் அடிமையாகவே வாழத் தயாராகி விட்டார்.

பழனிசாமி இந்த தேர்தலுக்கு பின், கவர்னராக வேலைக்கு போகலாம். கவர்னர் வேலை கஷ்டம் இல்லை. இங்கேயும் ஒருவர் இருந்தார். சட்டசபையில் சத்தம் போடுவார், வெளியே சென்று விடுவார். பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கவலைப்பட மாட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link