வேலுமணி யாருடைய ஸ்பை?
கோவை உங்கள் கோட்டை என்று நினைக்கும் நினைப்பில் எப்போதோ ஓட்டையைப் போட்டுவிட்டோம். பழனிசாமியுடன் இருக்கும் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழலாட்சித் துறை அமைச்சர் என அனைவரும் சொன்னார்கள். பழனிசாமியாவது தன்னுடைய சம்பந்திக்கு டெண்டர்களை வாரி வாரி வழங்கினார். வேலுமணி தன்னுடைய குடும்பத்துக்கே வழங்கினார். பல பேருக்குத் துரோகம் செய்து வேட்டு வைத்த பழனிசாமிக்கே வேட்டு வைக்கப் போகும் ‘ஸ்பை’, வேலுமணிதான். யாருடைய ஸ்பை? உங்களின் கணிப்புக்கே விடுகிறேன். இவர்கள் கோவைக்கு செய்ததெல்லாம் வெறும் துரோகம்தான். தொழில், வர்த்தக மையமான கோவைக்குப் பா.ஜ.க. அரசு மெட்ரோ கிடையாது எனக் கையை விரித்தது, கோவை மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? தி.மு.க.வின் சூப்பர்ஸ்டாரான தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பிலேயே, நம்முடைய எதிரிகள் எல்லாம் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்று, நேற்றுகூட பார்லிமென்ட்டில் காட்டியிருக்கிறோம். 5 நாளில் தேர்தலை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார்கள். தேர்தல் பிரசாரம் எல்லாம் நெக்ஸ்ட்டுதான், தமிழ்நாட்டு உரிமைகள்தான் எங்களுக்கு முக்கியம் என களத்தில் இறங்கிச் சாதித்துவிட்டோம். கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையரை நின்றுவிடுமா? கருப்புச் சட்டை போட்டால் நின்றுவிடுமா? என கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து, இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது. தொகுதி மறுவரையறைக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி பேசி பழனிசாமி முட்டுக் கொடுத்தார். கடைசியில் என்ன ஆனது? பழனிசாமி இனிமேல் பா.ஜ.க.வுக்கு முட்டுக் கொடுக்கும்போது, கொஞ்சம் பார்த்துப் பக்குவமாக கொடுங்கள். இல்லை என்றால் இப்படித்தான் ஆகும். பா.ஜ.க.வை நம்பினால் உங்களுக்கு இந்த கதிதான்.

