நான் தனியார் வங்கியில் தங்க நகை அடமானம் வைத்து விட்டு, வீடு திரும்புவதற்குள், என் கணக்கில் இருந்து 132 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. கேட்டபோது, ஆர்.பி.ஐ.,யின் புதிய விதியின்படி, நகை அடகு வைத்தோரிடம் இருந்து சிறிய தொகை எடுக்கப்பட்டு, அது காப்பீட்டு நிறுவனத்திடம் கொடுக்கப்படும். நகையை மீட்பதற்கு முன், இறப்பு நேர்ந்தால், உங்கள் நாமினி, எந்த பணமும் திருப்பிச் செலுத்தாமல் நகையை பெறலாம் என்று தெரிவித்தனர். இது உண்மையா?
– அசோக், செங்கல்பட்டு
இதற்கு, ‘கிரெடிட் லைப் இன்ஷூரன்ஸ்’ அல்லது ‘லோன் ப்ரொடெக்ஷன் இன்ஷூரன்ஸ்’ என்று சொல்வர். ஆர்.பி.ஐ., இதை வற்புறுத்தவில்லை. தங்க நகை மீது கடன் கொடுக்கும் நிறுவனங்கள், அதை திருட்டு, தீ உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ., சொல்கிறது. அதற்கான செலவை அந்நிறுவனம் தான் ஏற்கும் அல்லது தங்களுடைய பிராசசிங் கட்டணத்தில் அதை சேர்த்து விடும்.
உங்கள் விஷயத்தில் இதை செலவாகப் பார்க்க வேண்டாம். இது, ஒருவிதமான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வழிமுறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஆர்.பி.ஐ., பெயரை சொன்னால் தான் நீங்கள் நம்புவீர்கள். காப்பீடு எடுப்பீர்கள் என்பதற்காகவும், தங்கள் டார்க்கெட்டை முடிப்பதற்காகவும் வங்கி அதிகாரிகள் இப்படி தெரிவித்திருக்கலாம். ‘பொய்மையும் வாய்மை யிடத்து…’ என்று இதற்கு பெயர்.
தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக 15 ஆண்டுகள் பணிபுரிந்து, ஒரு விபத்தில் விருப்ப ஓய்வு பெற்றேன். எனது இ.பி.எப்., பென்ஷன் தொகையை பெற, இ.பி.எப்.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தால், உங்களுடைய ஆதார் இணைக்கப்படவில்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். நிறுவனத்திடம் கேட்டால், உங்களது ஆதார் இ.பி.எப்.ஓ., இணையத்தில் லிங்க் ஆகவில்லை என்றும், பி.எப்., எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று கூறுகின்றனர். இப்படி ஐந்து ஆண்டுகளாக பி.எப்., அலுவலகத்துக்கும், நிறுவனத்திற்கும் அலைகிறேன். ஏன் என் ஆதார் இ.பி.எப்.ஓ., போர்ட்டலில் லிங்க் ஆகவில்லை, இதற்கு என்ன செய்வது?
– கார்த்தி, திருப்பூர்
உங்கள் ஆதார் எண், பி.எப்., கணக்குடன் சேராமல் போவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கலாம். ஒன்று, பெயர் அல்லது பிறந்த தேதி முரண்பாடு. இது தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம். உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், பி.எப்., கணக்கில் இருக்கும் பெயரும் சரியாக, ஒரே மாதிரி இருக்கிறதா என்று பாருங்கள்.
இல்லையெனில், ‘ஜாயின்ட் டிக்ளரேஷன் பார்ம்’ என்ற படிவத்தை நிரப்பி, உங்கள் நிறுவனத்தில் கையெழுத்து வாங்கி, உங்கள் பகுதி பி.எப்., அலுவலகத்தில் நேரடியாக கொடுங்கள்.
நீங்கள் 15 ஆண்டுகளாக வேலை செய்துள்ளீர்கள். இடையில் எப்போதாவது பழைய பி.எப்., எண்ணில் இருந்து புதிய யு.ஏ.என்., நம்பருக்கு மாற்றப்பட்டிருந்தால், அல்லது இரண்டு யு.ஏ.என்., எண்கள் உங்களுக்கு உருவாக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் வரும். அதனால், பி.எப்., அலுவலகத்திற்கு சென்று, ‘எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட யு.ஏ.என்., உள்ளதா என்று கேளுங்கள். இந்த இரண்டு பிரச்னைகளில் ஏதேனும் ஒன்றை தீர்ப்பதன் வாயிலாக, உங்களுக்கு வழி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
பல மியூச்சுவல் பண்டு ஆலோசகர்கள், நிப்டி 50 அல்லது நிப்டி நெக்ஸ்ட் 50 ஆகிய இண்டெக்ஸ் பண்டுகளில் மட்டும் முதலீடு செய்யுங்கள் என்று சொல்கின்றனர். மிட்கேப் அல்லது ஸ்மால்கேப் பண்டுகளையோ, ஏன் இ.டி.எப்.,களையோ கூட பரிந்துரை செய்ய மாட்டேன் என்கின்றனர். இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?
– விஜயகுமார், கரூர்
இரண்டு முக்கியமான பிரச்னைகளை நான் பார்க்கிறேன். பங்கு சந்தை எந்த திசையில் நகரும் என்று சொல்ல முடியவில்லை என்பது தான் முதலாவது. என்ன தான் நம் நாட்டில் பணவீக்கம் குறைந்திருந்தாலும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்திருந்தாலும், பெருநிறுவனங்களின் லாபம் இரண்டு இலக்க அளவுக்கு வளரும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பது உறுத்தலாகவே இருக்கிறது. நம் கண்ணை ஏதோ ஒன்று மறைக்கிறதோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை.
இன்னொரு பிரச்னை, பங்குகளின் மதிப்பு. பெரும்பாலான மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் வருவாய் ஈட்டும் திறனை விட, அதன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது. இந்த அதீத மதிப்பு தொடருமா என்பதையும் சொல்ல முடியவில்லை. மதிப்புள்ள பங்குகளை கண்டுபிடிப்பது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல் இருக்கிறது.
அதனால் தான், இண்டெக்ஸ் பண்டுகளில் பணத்தை போட்டுவிட்டு, நிம்மதியாக இருங்கள் என்று நிதி ஆலோசகர்கள் சொல்கின்றனர். 50 பங்குகளில் நான்கு அல்லது ஐந்து பங்குகள் முன்னே நகர்ந்தாலும், இண்டெக்ஸ் மேலே உயரும். தெளிவான திசை தெரியும் வரை, எதற்கு ரிஸ்க் என்பது தான் எல்லாருடைய எண்ணமும்.
பைக் டாக்ஸி உபயோகிக்க அரசு அனுமதி உள்ளதா, இல்லையா? ஆட்டோவை விட இதில் கட்டணம் குறைவு தான். ஆனால், சட்ட ரீதியாக இதன் நிலை என்ன?
– சதிஷ், கோவை
இதில் அடிப்படை பிரச்னை, மத்திய – மாநில அரசுகளிடையே நிலவும் குழப்பம். மத்திய அரசு 2020லேயே பைக் டாக்ஸிக்களை அனுமதித்து விட்டது. ஆனால், போக்குவரத்து துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசு இதுவரை பைக் டாக்ஸிகளுக்கான அதிகாரப்பூர்வ அனுமதியையோ அல்லது அதற்கான தனிப்பட்ட விதிமுறைகளையோ வெளியிடவில்லை.
இன்னொரு சிக்கல் நம்பர் பிளேட் தொடர்பானது. சட்டப்படி, எல்லா வாடகை வாகனமும் மஞ்சள் போர்டு போட்டு தான் ஓட்ட வேண்டும். ஆனால், பைக் டாக்ஸிகளோ, வெள்ளை போர்டு கொண்ட தனிநபர்களின் சொந்த வாகனங்கள். அவற்றை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது.
உங்களை பொறுத்தவரை, கட்டணம் குறைவு என்பது மிகப்பெரிய சவுகரியம் தான். ஆனால், பைக் டாக்ஸியில் போகும் போது, அசம்பாவிதம் ஏதேனும் நடந்துவிட்டால், காப்பீடு க்ளைம் செய்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். தனிநபர் வாகன காப்பீடு, வணிக பயன்பாட்டுக்கு இழப்பீடு தராது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
*************@***il.com“>pa*************@***il.com ph:98410 53881
