வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டில்லி அணி ‘எலிமினேட்டர்’ போட்டிக்கு தகுதி பெற்றது.
வதோதராவில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, உ.பி., அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
உ.பி., அணிக்கு கேப்டன் மெக் லானிங் (0) ஏமாற்றினார். தீப்தி சர்மா (24), சிம்ரன் ஷேக் (22) ஓரளவு கைகொடுத்தனர். உ.பி., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது. ஷிகா பாண்டே (23), சோபி எக்லெஸ்டோன் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் மரிஜான் காப் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷைபாலி வர்மா (29) நல்ல துவக்கம் தந்தார். லாரா வால்வார்ட் (47) நம்பிக்கை தந்தார். தீப்தி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (34*) வெற்றியை உறுதி செய்தார்.
டில்லி அணி 18.4 ஓவரில் 126/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த டில்லி அணி (8 புள்ளி) ‘எலிமினேட்டர்’ போட்டிக்குள் நுழைந்தது. கடைசி இரு இடம் பிடித்த ‘நடப்பு சாம்பியன்’ மும்பை (6), உ.பி., (4) அணிகள் வெளியேறின. நாளை வதோதராவில் நடக்கவுள்ள ‘எலிமினேட்டர்’ போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன.
