aadi amman Pongal அம்மனுக்கு எதற்காக பொங்கல் வைத்து படைப்பதன் ஆன்மீக காரணம் இது தானா?

வழக்கமாக கோவில்களில் வேண்டுதல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என்றாலே பொங்கல் வைப்பது வழக்கம். அதுவும் அம்மன் கோவில் என்றாலே பொங்கல் வைக்கும் வழிபாடு மிகவும் விசேஷமானது. மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்மனுக்கு பொங்கல் வைத்து, படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். அது ஏன் நேர்க்கடன் செலுத்துவது என்றாலே பொங்கல் வைக்கிறார்கள்? மற்ற உணவுகளுக்கு இல்லாத சிறப்பு இதில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழர் பண்பாட்டில் “பொங்கல்” என்பது உணவு மட்டுமல்ல. அது இறைவனுக்கு செலுத்தும் நன்றிக் கடனாக கருதப்படுகிறது. பூமி விளைந்தது, மழை பெய்தது, சூரியன் ஒளி தந்தான், மாடுகள் உழைத்தன, இறைவன் அருள் புரிந்தார். இவற்றுக்கெல்லாம் நன்றி கூறும் மனநிலையே பொங்கல் படைப்பின் அடிப்படை. பொங்கல் பொங்குவது என்பது வீட்டில் வளம் பொங்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் வெளிப்பாடு.

அம்மனுக்கு ஏன் பொங்கல் படைக்கிறார்கள்?

தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுவது பல நூற்றாண்டுகளாக தொடரும் மரபாகும். குறிப்பாக ஆடி மாதம் அம்மன் திருவிழாக்களிலும், சில பகுதிகளில் மாசி மாதம் நடைபெறும் கிராமத் திருவிழாக்களிலும் இந்த வழிபாடு மிகுந்த பக்தியுடன் நடைபெறுகிறது. தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இன்றும் “மாரியம்மன் பொங்கல்” என்ற மரபு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அம்மன் என்பது தாயின் வடிவம். பூமியை பராசக்தியின் அம்சமாக கருதி வழிபடுகிறோம். அதோடு பொங்கல் வைப்பது என்பது பஞ்சபூதங்களின் வழிபாடாக கருதப்படுகிறது. பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒன்றிணைத்து செய்யப்படும் பொங்கலை அம்மனுக்கு படைத்து வழிபடுவதால் அம்மனின் மனம் மகிழும் என்பது நம்பிக்கை.

சர்க்கரை பொங்கலில் அரிசி, வெல்லம், நெய், பருப்பு என பலவிதமான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி தன்மை கொண்டவை. ஆனால் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொங்கலாக சமைக்கும் போது, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து, கரைந்து, இறுதியில் இனிப்பு சுவை கொண்ட பொங்கலாக மாறி விடுகிறது. அது போல் நமக்குள்ளும் பலவிதமான குணங்கள், எண்ணங்கள் உள்ளன. இறைவனை முழுவதுமாக சரணடைந்து, அவரிடம் நம்மை ஒப்படைக்கும் போதும், பரம்பொருளுடன் ஒன்றாக கலக்கும் போது, இனிப்பான முக்தி என்னும் பேரின்பம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த ஆன்மீக தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இறைவனுக்கு பொங்கல் வைத்து படைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஆடியில் பொங்கல் வைப்பது ஏன்?

அது மட்டுமின்றி வெப்பம் அதிகமாக இருக்கும் மாசி, ஆடி போன்ற மாதங்களில் அம்மனுக்கு பொங்கல் செய்து படைத்தால் அவள் மனம் மகிழ்ந்து, நமக்கு அருள் செய்வாள். வேண்டிய வரங்களை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இனிப்பான பொங்கலை அம்மனுக்கு படைப்பதால் அம்மனின் அருளால், நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களும் மறைந்து, இன்பமயமானதாக மாறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்த பொங்கலை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதால், பலருக்கும் அன்னதானம் வழங்கிய புண்ணியமும் நமக்கு கிடைக்கும்.

Source link