ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மாதம் என்று மட்டும் தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, தெய்வீக அருளை பெறுவதற்கான அற்புதமான தெய்வீக மாதமாகும். அண்ட சராசரங்களையும் தனக்குள் அடக்கி, இயக்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளாகிய ஈசனே ஆடி மாதத்தில் சக்திக்குள் அடக்கம் என ஆன்மீக மரபுகள் சொல்கின்றன. அதனால் ஆடி மாதத்தின் ஒவ்வெகாரு நாளுமே ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒரு தெய்வத்தின் சக்தியும், அருளும் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தின் எந்த நாளில், எந்த தெய்வத்தின் அருள் நிறைந்து காணப்படும், அந்த குறிப்பிட்ட நாளில் அந்த தெய்வத்தை வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்தந்த தெய்வங்களை முறையாக வழிபடுவது சிறப்புக்குரியதாகும். ஆடி மாதத்தின் எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாத கிழமைகளும், வழிபட வேண்டிய தெய்வங்களும்:
* ஞாயிறு – அனுமன். நவகிரக தோஷங்கள் நீங்கும். ராகு கேது தோஷத்தின் வீரியம் குறையும்
* திங்கள் – சிவன். சந்திர தோஷம் நிவர்த்தி அடையும். துன்பங்கள் நீங்கி வளம் பெருகும்.
* செவ்வாய் – முருகன். தீராத கடன் தொல்லை நீங்கும். சொந்த வீடு கட்டுதல், நிலம் வாங்குவதல் ஆசை நிறைவேறும்.
* புதன் – பெருமாள். தொழிலில் அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டால் இந்த நாளில் பெருமாளை வழிபடலாம்.
* வியாழன் – தட்சிணாமூர்த்தி. ஜாதகத்தில் குரு தசை பலவீனமாக இருந்தால், உடனே தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறந்தது.
* வெள்ளி – அம்மன். ஒட்டுமொத்த ஆண்டுகளிலேயே, மிக மிக சக்தி வாய்ந்த மங்களம் தரும் நாளாக ஆடி வெள்ளி கருதப்படுகிறது. அளவற்ற செல்வம் பெருகும்.
* சனி – வெங்கடாஜலபதி. மிக கடுமையான ஏழரை சனி. அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி போன்றவற்றின் வீரியம் குறையும்.
ஆடி மாதத்தில் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும் இந்த கிழமைகளில் இந்த தெய்வங்களை வழிபடுவதும் சிறப்புக்குரியதாகும். மிக கடுமையான துன்ங்களில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனை தீர எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, தொடர்ந்து அந்த தெய்வத்திற்குரிய வழிபாட்டினை செய்து வரலாம். முடிந்தவர்கள் விரதம் இருந்தும், முடியாதவர்கள் விரதம் இருக்காமல் வழிபாடுகள் மட்டும் செய்து வரலாம்.
இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட இந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். சாமி படத்தை துடைத்து சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம். எளிமையாக ஏதாவது நைவேத்தியம் படைத்து, மனதார அந்த தெய்வத்தின் திருநாமங்களை சொல்லி வழிபட வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். யாருக்காவது அன்னதானம் உள்ளிட்ட தானங்கள் செய்யலாம். இது கர்மவினைகளை குறைத்து, புண்ணிய பலனை அதிகரிக்க செய்யும்.
Source link
