Chef Damu Death: ஷெஃப் தாமு மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

தாமு மரணம்: சமையல் கலையில் வல்லவரான ஷெஃப் தாமுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தாமுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

தாமு இறந்த செய்தி வெளியானதும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் அப்பா. நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதை கேட்டு ஒரு நிமிடம் எதுவுமே தோன்றவில்லை. அந்த அளவுக்கு அதிர்ச்சியாக உள்ளது. காலையில் எழுந்த உடன் உங்களின் மரண செய்தி கேட்டு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ரொம்ப கவலையாக இருக்கிறது அப்பா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையல் தான் வாழ்க்கை: சமையல் கலைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தாமுவின் முழுப்பெயர் தாமோதரன். தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் சமைத்து கின்னஸ் சாதனை செய்தவர். மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் முனைவர் பட்டம் பெற்றவர். தாமுவின் திறமையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

நல்ல மனிதர் தாமு: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வந்தார் தாமு. அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டதால் அவரை உரிமையுடன் அப்பா என்றே ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். தான் ஒரு பெரிய ஆள், பிரபலமான ஷெஃப் என்கிற தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாதவர்.

தாமுவின் பெயரை சொன்னாலே அவரின் சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும். என்ன நடந்தாலும் அவரின் முகத்தில் அந்த சிரிப்பு மட்டும் மிஸ் ஆகவே ஆகாது. அப்படி சிரித்த முகமாக பாசிட்டிவாக இருப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. அவரின் நல்ல குணத்திற்காக பிரபலங்களும், ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள்.

நமக்கும் ஆசை வரும்: ஷெஃப் தாமு சமையல் செய்யும் முறையை பார்த்தாலும் நமக்கும் சமைக்க வேண்டும் என்கிற ஆசை வரும். அவர் சமைக்கும்போதே அதை உடனே சாப்பிட்டுவிட முடியாதா என்று நாக்கில் எச்சில் ஊரும். சமையல் கலை உள்ளவரை தாமுவின் பெயர் நிலைத்து நிற்கும். அவரை ரசிகர்கள் கொண்டாடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.

தாமு விளக்கம்: தாமு இறந்துவிட்டதாக ஒரு மாதத்திற்கு முன்பு வதந்தி பரவியது. அதை பார்த்துவிட்டு நான் இறக்கவில்லை உயிருடன் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார்.

நான் நல்லா இருக்கிறேன். என்னை பற்றிய வதந்திகளை நம்பாதீங்க. கடவுளின் அருளால் நான் ஆரோக்கியமாக உள்ளேன். தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம். முட்டியில் தான் கொஞ்சம் வலியாக உள்ளது என்று அந்த வீடியோவில் தெரிவித்தார் தாமு.

சென்றுவிட்டாரே: ஆரோக்கியமாகத் தான் இருக்கேன் என்று விளக்கம் அளித்த ஒரு மாதத்தில் இறந்துவிட்டாரே. இன்று காலை வெளியான தகவலும் வதந்தியாக இருந்துவிடக் கூடாதா?. நான் இங்கே தான் இருக்கிறேன் என தாமு அப்பா மீண்டும் வீடியோ வெளியிட மாட்டாரா என ரசிகர்கள் கண்ணீர் விடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

குரேஷி கண்ணீர்: தான் தாமு உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, உங்களை மிஸ் பண்ணுவோம் அப்பா என கண்ணீர் விட்டுள்ளார் குக் வித் கோமாளி புகழ் குரேஷி.

Source link