பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துசவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் செப் தாமு. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்ரிங் டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் சமையல் கலைஞர் என்ற பெருமையை பெற்ற செப் தாமு, கடந்த 2025-ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
சின்னத்திரையில் பல சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த செப் தாமு, 2014-ம் ஆண்டு 24 மணி நேரம் 30 நிமிடங்களில் 617 உணவு வகைகளை சமைத்து கின்னஸ் சாதனை படைத்தவர். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்த செப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், கால்வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செப் தாமு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் சக சமையல் கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையற்கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் முக்கிய பங்காற்றிய செப் தாமுவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமையற்கலை மட்டும் இல்லாமல், கள்ளப்படம், உள்குத்து உள்ளிட்ட படங்களில் சமையல் கலைஞராகவும், சில திரைப்படங்களில் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார் செஃப் தாமு என்பது குறிப்பிடத்தக்கது.
