Tamil Nadu News Today LIVE
சென்னையில் இன்று (ஜூலை 28) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரே விலையில் நீடிக்கின்றன.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, ஒரு கிலோ சி.என்.ஜி ரூ.97.00 என நேற்றைய நிலையிலேயே மாற்றம் இன்றி தொடர்கிறது.
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம்
தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்படுகின்றன. இதன் காரணமாக, 10-வது மாடியில் செயல்பட்டு வந்த செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (DIPR) பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
மேலும், கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய மாடிகளில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுக் கட்டிடப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Jul 28, 2026 07:40 IST
விழுப்புரம் அருகே 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொடூர விபத்து
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் ஐயூர் அகரம் ரயில்வே பாலம் அருகே இன்று (ஜூலை 28) அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் காரில் பயணித்த 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் பின்னால் கார் மோதியதைத் தொடர்ந்து டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில், காரில் சிக்கியவர்களை சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
Jul 28, 2026 07:40 IST
கரூர் கூட்ட நெரிசல்: அரசுப் பணி ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணையை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (ஜூலை 28) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்டு அரசுப் பணி நியமன ஆணை பெற்றவர்களின் வாதங்களைக் கேட்காமலேயே சென்னை உயர்நீதிமன்றக் கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். பணி ஆணை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 28, 2026 07:39 IST
முன் ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்
தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை செலுத்தி முன் ஜாமீன் பெற்றார்.
முன் ஜாமீன் நிபந்தனையின்படி, நாளை முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் இரு வேளையும் ஆஜராகி கையெழுத்திடவுள்ளார்.
-
Jul 28, 2026 07:38 IST
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் புதிய உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சிறப்புக்குழு, மாநிலத்தின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது குறித்து விரிவாக ஆராய்ந்து 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Jul 28, 2026 07:38 IST
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: மாணவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் கபில் சிபல்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வழக்குளைச் சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தும், அதனை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு சட்டப் பூர்வமாக உதவும் வகையில் இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 28, 2026 07:38 IST
கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல 3 மாதங்கள் தடை
தமிழ்நாட்டிலிருந்து சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு 3 மாத காலத்திற்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையை மீறி கனிமங்களைக் கடத்த முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
