Chennai News Today LIVE Updates: விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு

Tamil Nadu News LIVE

சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்

இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Oct 27, 2026 10:08 IST

    கைதிகள் தப்பி ஓட்டம்: ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

    தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியுள்ள பெரும் பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தப்பியவர்கள் வேறு மாவட்டங்களுக்குத் தப்பியோடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

    தப்பியோடிய கைதிகளின் புகைப்படங்கள் அனைத்து முக்கிய காவல் நிலையங்களுக்கும் மற்றும் போக்குவரத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதோடு, சந்தேகத்திற்கு இடமான நபர்களைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்

  • Oct 27, 2026 10:07 IST

    தேனியில் டி.ஜி.பி நேரில் ஆய்வு

    தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய பெரும் பரபரப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கைதிகள் தப்பியோடிய சூழ்நிலை குறித்தும், பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்தச் சம்பவத்தில் தப்பிய 17 பேரில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரைக் கூண்டோடு பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

    200 கைதிகள் மட்டுமே அடைப்பதற்கு வசதி உள்ள இந்தச் சிறையில் விதிமுறைகளை மீறி 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கண்காணிக்க வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன

  • Oct 27, 2026 10:06 IST

    பழனி முருகன் கோவிலில் பிரசாதங்களின் விலை உயர்வு

    பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலையை உயர்த்தி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வானது வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.   

    இந்த விலை உயர்வின்படி, லட்டு, அதிரசம், தேன் தினைமாவு, சர்க்கரை பொங்கல், புளியோதரை ஆகியவை ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆகவும், குறிப்பாக முறுக்கு ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும் (ரூ.10 உயர்வு) அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரசாதங்களின் விலை தலா ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  • Oct 27, 2026 10:06 IST

    ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு

    ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய விலை உயர்வானது நாளை (அக்டோபர் 28) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பால்கோவா, மைசூர்பாக், லஸ்சி உள்ளிட்ட அனைத்து வகையான ஆவின் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  • Oct 27, 2026 10:05 IST

    அன்பில் மகேஷ்க்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்

    அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த வழக்கில், அவரை கைது செய்யும் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வழக்கு தொடர ஆளுநரிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என்றும் திமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

Source link