Chennai News Today LIVE Updates: ஸ்டாலின் மனு பின்னணி: கொளத்தூரில் இன்று 14 வாக்குச் சாவடிகளின் இ.வி.எம் இயந்திரங்கள் சரிபார்ப்பு

Tamil Nadu News LIVE

சென்னையில் இன்றைய எாிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலைகளில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கின்றன.

இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சிஎன்ஜி வாயுவின் விலை கிலோவுக்கு ரூ. 97.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கபெருமாள் கோவில் – செய்யாறு 4 வழிச்சாலைத் திட்டம்: தி.மு.க. அரசின் டெண்டரை ரத்து செய்தது த.வெ.க. அரசு

சென்னையுடன் செய்யாறு தொழிற்தட பகுதியை இணைக்கும் வகையில், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து செய்யாறு சிப்காட் வரை 43 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்காகக் கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரைத் தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் கடந்த மார்ச் மாதம் இந்த டெண்டர் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Jul 29, 2026 07:46 IST

    மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது

    பாமக பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.

    அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், இனி கட்சியை அன்புமணி ராமதாஸ் வழிநடத்துவார் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் கட்சி தொடர்பான முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

  • Jul 29, 2026 07:46 IST

    இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன்: தமிழ்நாடு அரசு முடிவு

    தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.7,000 கோடி கடன் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் கூட்டுறவுத் துறை மூலம் இந்தக் கடன்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சர் தலைமையில் வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  • Jul 29, 2026 07:45 IST

    பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது

    பழனி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மட நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி (CBCID) காவல்துறை மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளது.

    இவ்வழக்கில் ஏற்கனவே 2 வாரங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் வெள்ளைத்துறை, அன்வர்தீன் மற்றும் முருகதாஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது சேதுபதி என்பவரையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

    இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • Jul 29, 2026 07:45 IST

    அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் (OMR – ECR) இணைப்புச் சாலைப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதற்கும் பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Video: Sun News

  • Jul 29, 2026 07:44 IST

    கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இன்று ஆய்வு

    கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) இன்று சரிபார்க்கப்பட உள்ளன.

    இதற்காக, சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கை இன்று காலை 9 மணிக்கு திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில், இந்த வாக்கு இயந்திரங்களின் நினைவகம் (Memory) மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர்களை (Microcontrollers) சரிபார்க்கும் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது.

  • Jul 29, 2026 07:43 IST

    சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம்: போரூர் – பூவிருந்தவல்லி ஆளில்லா ரயிலில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு

    சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், போரூர் முதல் பூவிருந்தவல்லி வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள அதிநவீன ஆளில்லா ரயிலில் (Driverless Train) முதலமைச்சர் விஜய் இன்று பயணித்து நேரடி ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் விஜய், நந்தனத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று பார்வையிட உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து கிண்டி, போரூர் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



Source link