வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் பல கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர் சேவைப் பிரிவு மூலம் அவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால், உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்யவோ அல்லது மூடவோ நீங்கள் கோரும்போது, வங்கிகள் பல்வேறு காரணங்களைக் கூறி அதைத் தவிர்க்கவோ அல்லது தாமதப்படுத்தவோ செய்யலாம். கிரெடிட் கார்டை மூட வேண்டாம் என்று அவர்கள் உங்களைச் சம்மதிக்க வைக்க முயற்சிக்கலாம். நீங்களும் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டாலோ அல்லது உங்கள் கிரெடிட் கார்டை மூட நினைத்தாலோ ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகள்!
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர் கேட்டும் ஒரு வங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் கிரெடிட் கார்டை மூடத் தவறினால் அந்த வங்கிக்கு ஒரு நாளைக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர் ஒருவர் தனது கிரெடிட் கார்டை மூடக் கோரும்போது, சம்பந்தப்பட்ட வங்கி அல்லது கார்டு வழங்கும் நிறுவனம் ஏழு வேலை நாட்களுக்குள் அந்தக் கார்டை மூட வேண்டும். மேலும், வங்கி அல்லது நிறுவனம் இது குறித்த உறுதிப்படுத்தலை வாடிக்கையாளருக்கு SMS அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
தினமும் 500 ரூபாய் கிடைக்கும்!
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டை மூட வங்கி தவறினால் 8ஆவது நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும். கார்டை மூடுவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 500 என்ற அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
இருப்பினும், உங்கள் கார்டில் நிலுவைத் தொகைகள் (EMI, பில் கட்டணங்கள் அல்லது தாமதக் கட்டணங்கள்) ஏதேனும் இருந்தால் இந்த 7-நாள் விதி பொருந்தாது. முதலில் அனைத்து நிலுவைத் தொகைகளையும் நீங்கள் செலுத்த வேண்டும். அதன் பிறகுதான் இந்த 7-நாள் விதி பொருந்தும். வங்கி இந்த அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் ‘பேங்கிங் ஓம்பட்ஸ்மேன்’ (Banking Ombudsman) இணையதளம் (cms.rbi.org.in) மூலம் நீங்கள் புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில் வங்கிக்குக் கடுமையான அபராதத்தை ரிசர்வ் வங்கி விதிக்க முடியும்.
கார்டை மூடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நிலுவைத் தொகை: கிரெடிட் கார்டை மூடுவதற்குக் முன்பு அனைத்து நிலுவைத் தொகைகளையும், கட்டணங்களையும் முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
ரிவார்டு புள்ளிகள்: கிரெடிட் கார்டில் மீதமுள்ள ரிவார்டு புள்ளிகளை (Reward Points) ரத்து செய்வதற்கு முன்பே பயன்படுத்திப் பலனடைய வேண்டும்.
ஆட்டோ டெபிட்: மின்கட்டணம், ஓடிடி சந்தாக்கள் (OTT Subscriptions) அல்லது EMI போன்றவற்றுக்காக கார்டு இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை வேறு கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
கிரெடிட் கார்டை ரத்து செய்யும் முறைகள்!
வாடிக்கையாளர் சேவை மையம்: வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டை ரத்து செய்யக் கோரலாம்.
மின்னஞ்சல் அல்லது ஆன்லைன்: வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை வைக்கலாம்.
உறுதிப்படுத்தல் கடிதம்: கார்டு வெற்றிகரமாக மூடப்பட்டதற்கான உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
