ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் ஹர்திக் பாண்டியா பெயர் அடிபட்டதும், டிரேடிங் பேச்சு வார்த்தைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இளம் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேட்டதால், பேச்சு வார்த்தை மந்த நிலைக்கு சென்றது.
பிறகு, சில வீரர்கள் டிரேடிங்கில் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானாலும், எந்த டிரேடிங் பேச்சு வார்த்தையும், இறுதிக் கட்டம் வரை கூட செல்லவில்லை.
இந்நிலையில், டிரேடிங் பேச்சு வார்த்தை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம், டெல்லி கேபிடல்ஸை தொடர்புகொண்டு, ரிஷப் பந்தை விட்டுக்கொடுக்கிறோம். மாற்றாக எந்த வீரரை தருவீர்கள் எனக் கேட்ட நிலையில், அக்சர் படேலை விடுவிக்க டெல்லி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், லக்னோவுக்கு செல்ல முடியாது என அக்சர் படேல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதனால், மாற்றாக குல்தீப் யாதவை, லக்னோ அணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இப்படி, இந்த பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், கேப்டன் பதவி கிடைக்காத அதிருப்தியில், அக்சர் படேலும் டெல்லி கேபிடல்ஸைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளாராம். இதனால், டெல்லி அணிக்கு ஒரு ஸ்பின்னர், ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் காலியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே முடிவு: இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸுக்கு, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு முழுநேர ஸ்பின்னரை டிரேடிங்கில் அனுப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாற்றாக, 37 வயதாகும் டேவிட் மில்லரை வாங்க திட்டமிட்டுள்ளனர்.
எப்படியிருந்தாலும், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்திற்கு முன் அகில் ஹோசைன், ராகுல் சஹார் ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்கதான் முடிவு செய்திருந்தது. அதேநேரத்தில், டேவிட் மில்லருக்கு அதிக வயதாகிவிட்டதால், அவரையும் அணியில் வைத்திருக்க முடியாத நிலையில்தான் டெல்லி கேபிடல்ஸும் இருக்கிறது. இதனால்தான், மில்லரை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாம்.
ஐபிஎல் 2027 சீசன் முடிந்து, 2028 சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறும். அப்போது, தரமான பினிஷர் வீரரை வாங்கிக்கொள்ளலாம். அதுவரை, ஐபிஎல் 2027 சீசனை டேவிட் மில்லரை வைத்து ஒப்பேத்திவிடலாம் என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறதாம்.
மேலும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப, மூன்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் டார்கெட் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால், டெல்லி கேபிடல்ஸில் இருந்து டிரேடிங்கில் வெளியேற விரும்பும் அக்சர் படேலை வாங்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
ஆனால், இளம் வீரரை வாங்கினால் நீண்ட காலத்திற்கு விளையாட வைக்க முடியும் என சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் தெரிவிப்பதால், அக்சர் படேலை வாங்க பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம் எனவும் நிலைபாட்டை எடுத்துள்ளார்களாம்.
மேலும், புது தலைமை பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரரைதான் நியமிக்க வேண்டும் என தோனி முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் புது தலைமை பயிற்சியாளரை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
