ஹர்திக் பாண்டியாவை, எப்படியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு, மகேந்திரசிங் தோனி இருக்கிறார். மேலும், ஹர்திக் பாண்டியாவும், சிஎஸ்கே வர முடிவு செய்திருப்பதால், சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையில் பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் டிரேடிங் டீல் பேசியபோது, சிஎஸ்கே அணி நிர்வாகிகளுடன் மகேந்திரசிங் தோனியும் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, எந்த வீரர் வேண்டும் என இறுதியாக ஒருமுறை கேட்கிறோம் என சிஎஸ்கே தரப்பு கேட்டுக் கொண்டதாம்.
அப்போதும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும்தான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டிருக்கிறது. இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க வாய்ப்பே இல்லை என சிஎஸ்கே தெரிவித்த நிலையில், பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இறுதியில், துபே மற்றும் டிவோல்ட் பிரேவிஸ் இருவரையும் கொடுங்கள் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இறங்கி வந்திருக்கிறார்கள்.
மேலும், துபே, பிரேவிஸ் இருவரையும் கொடுத்தால் உடனே ஹர்திக்கை அனுப்ப தயார். இதற்கும் கீழ் இறங்கி வர முடியாது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே பதில் இதுதான்: இதனைத் தொடர்ந்து பேசிய சிஎஸ்கே நிர்வாகம், சற்று பொறுமையாக இருங்கள். விரைவில் பதில் அளிக்கிறோம் என தெரிவித்துவிட்டு, கிளம்பிவிட்டார்களாம்.
சிஎஸ்கே முடிவு: டிவோல்ட் பிரேவிஸை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவை, சிஎஸ்கே நிர்வாகம்,மாற்றிக் கொண்டதாம். அதாவது, இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரட்’ எனும் தொடரில், பிரேவிஸ் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்து, அவரை டிரேடிங்கில் அனுப்புவது குறித்து இறுதி முடிவை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி ஹென்ட்ரட் தொடரில், லண்டன் ஸ்பிரிட் அணிக்காக பிரேவிஸ் விளையாட உள்ளார். இத்தொடரில், பிரேவிஸின் செயல்பாட்டை ஆராய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒருவேளை, பிரேவிஸ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபேவை மட்டும் அனுப்பிவிட்டு, 10 கோடி பணமும் கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை, இந்த டீல் மும்பை இந்தியன்ஸுக்கு பிடிக்கவில்லை என்றால், அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டீல் பேச வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சிஎஸ்கே நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு: இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில், சிஎஸ்கே நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது 32 வயதாவதாலும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதாலும், அவருக்கு மாற்றாக ஷிவம் துபேவை விட்டுக்கொடுப்பதே பெரிது. பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே போன்றவர்களை விடுவித்தால், அது பெரிய தவறாக இருக்கும் என சிஎஸ்கேவின் சில நிர்வாகிகள், அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் இருவரையும் வாங்க முடிவு செய்துள்ளார்களாம்.
