சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2008ஆம் ஆண்டில் இருந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளெமிங்கை, அப்பதவியில் இருந்து விடுவித்துவிட்டனர்.
கடந்த மூன்று சீசன்களிலும் சிஎஸ்கேவால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. மேலும், ஏலங்களின்போது தரமான வீரர்களை வாங்காதது போன்ற விஷயங்களால், பிளெமிங் மீது சிஎஸ்கே நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்ததால்தான், நீக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, முதலில் டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் கேமங் பதானியை சிஎஸ்கேவுக்குள் கொண்டுவர முடிவு செய்த நிலையில், பிறகு வெளிநாட்டு பயிற்சியாளரை அணிக்குள் கொண்டுவர முடிவு செய்தனர்.
இதற்காக, முதலில் பிரெண்டன் மெக்கல்லத்திடம் பேசலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு, வருடத்திற்கு 18.8 கோடி ஊதியமாக கொடுக்கப்படும் நிலையில், சிஎஸ்கேவுக்கு வர குறைந்தது 25 கோடியாவது கேட்பார் என்பதால், அந்த முடிவை கைவிட்டனர்.
அடுத்து, இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் இயான் மோர்கனிடம் சிஎஸ்கே நிர்வாகம் பேசியது. இவர், 20 கோடிக்கு மேல் கேட்ட நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் 15 கோடி தர முன் வந்தது.
இதுகுறித்து, சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது, இந்திய பயிற்சியாளருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தோனி அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம். வெளிநாட்டு பயிற்சியாளருக்கு, தேவையில்லாமல் ஏன் அதிக தொகையை கொடுக்க வேண்டும். கேமங் பதானி போன்ற திறமையான பயிற்சியாளர்கள் 2 கோடிகக்கே கிடைக்கும் நிலையில், ஏன் வெளிநாட்டு பயிற்சியாளரை நம்ப வேண்டும் என தோனி தெரிவித்ததாகவும், இதற்கு சிஎஸ்கே நிர்வாகிகளும் உடன்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேமங் பதானிக்கு 1.5 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தால், நிச்சயம் சிஎஸ்கேவில் இணைந்துவிடுவார் எனக் கருதப்படுகிறது.
மேலும், கேமங் பதானிக்கு சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய அனுபவம் அதிகமாக இருப்பதால், மைதானத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியும். மேலும், தமிழகத்தில் இருக்கும் திறமையான வீரர்களை, அவரால் அணிக்குள் கொண்டு வர முடியும். இதனால், பதானிக்கு 5 கோடி கொடுத்தாலும், அது ஒர்த் ஆன விஷயமாகதான் இருக்கும். இதனால்தான், பதானியை தேர்வு செய்ய தோனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே வரும் ரெய்னா: சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்ட சுரேஷ் ரெய்னா, தனக்கு தலைமை பயிற்சியாளர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், ரெய்னாவுக்கு எந்தவித அனுபவமும் இல்லை என்பதால், அவருக்கு அப்பதவியை கொடுக்க, சிஎஸ்கே நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில், ரெய்னாவுக்கு பீல்டிங் கோச் பதவியை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், புது தலைமை பயிற்சியாளராக வருபவர், சிஎஸ்கேவுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருப்பாராம். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரில், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், தென்னாப்பிரிக்காவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்க மாட்டாராம்.
