மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) உயர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஜூலை மாத சுழற்சிக்கான இந்த அறிவிப்பு தாமதமாகி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் வரும் அக்டோபர் 28ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. அன்றைய கூட்டத்தில் மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கின்றனர்.
அரசின் இந்த முடிவு சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை நேரடியாகப் பாதிக்கும். தீபாவளிக்கு முன்பாகவே, அதாவது இந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலேயே அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அக்டோபர் 6ஆம் தேதியில் நடந்த மாதத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அடுத்து, அக்டோபர் 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான போனஸும், அக்டோபர் 16ஆம் தேதி செயல்திறன் சாரா போனஸும் அறிவிக்கப்பட்டன. ஆனால், அகவிலைப்படி குறித்த விவாதம் மேலும் முன்னெடுக்கப்படவில்லை. அடுத்ததாக
அக்டோபர் 21ஆம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால், அடுத்த சாத்தியமான அமைச்சரவைக் கூட்டமான அக்டோபர் 28ஆம் தேதியை ஊழியர்கள் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும் நாளிலேயே முக்கியமான மற்றும் பெரிய முடிவுகளை மத்திய அரசு அறிவிப்பது வழக்கமான ஒன்றாகும். அப்படி விதிமுறை இல்லை என்றாலும் அக்டோபர் 28 ஆம் தேதியே அகவிலைப்படி அறிவிப்புக்கான மிகவும் சாத்தியமான நாளாகக் கருதப்படுகிறது. இதற்கான எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. சமீபத்திய அறிக்கைகள் மற்றும் தரவுகளின்படி, மத்திய அரசு இந்த முறை அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் என்ற விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அரசு 2 சதவீதம் உயர்த்தி, அதை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக மாற்றியது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி 63 சதவீதமாக உயரும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான பலன் ஜூலை முதல் நடைமுறைக்கு வரும். அதாவது, முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சேர்த்து வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
