தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதுவரை திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இடைத்தேர்தலில் தேமுதிகவின் ஆதரவை பெற திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் களமிறக்கப்பட்டுள்ளார்.மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரத்தில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனால் இரு தொகுதிகளிலும் திமுக மற்றும் தவெக இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருக்குமா?
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.குறிப்பாக, ஆறுஅதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல், தவெகவின் அரசியல் பலத்தை சோதிக்கும் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் கடந்த தேர்தலில் அதிமுக சின்னத்துக்கு கிடைத்த வாக்குகளை தவெக தக்கவைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுகவின் சின்னத்தை நம்பியே மக்கள் வாக்களித்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.அதே நேரத்தில், விஜய்க்கு இருக்கும் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கும், தவெகவின் புதிய அரசியல் அடையாளமும் வேட்பாளர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும் என அக்கட்சி தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேமுதிகவை நாடும் திமுக?
இந்த சூழலில், இடைத்தேர்தலில் தங்களது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் திமுக கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தேமுதிகவின் ஆதரவை கோர திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் ஆதரவு கோர உள்ளதாக கூறப்படுகிறது.
தனித்து நிற்கும் திமுக கூட்டணி?
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக பக்கம் சென்றுள்ள நிலையில், தற்போது கூட்டணியின் பலம் குறைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், தேமுதிகவின் ஆதரவை பெறுவது திமுகவுக்கு இந்த இடைத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், தவெகவும் தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Google-ஐ அலரவைக்கும் TVK! TVK Vijay Madurai Manaadu
இதனால் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் போட்டிக்கு முக்கியமான பரீட்சையாக மாறியுள்ளது. தேமுதிக யாருக்கு ஆதரவு அளிக்கிறது என்பதும் தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source link
