தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அதற்கு இன்று முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது தனிமனித குற்றச் செயல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எனத் தெரிவித்தார்.
“அநாகரிக அரசியலை தவிர்க்க வேண்டும்”
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தனது எலும்பை உடைப்பேன் என பேசியதாகக் கூறப்படும் கருத்தை சுட்டிக்காட்டினார்.
அநாகரிகமான அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெண்களை ஆபாசமாக பேசுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மூன்று கோப்புகள் என் டேபிளில் உள்ளன”
கடந்த வாரம் திமுகவின் ஊழல் தொடர்பாக மூன்று கோப்புகள் தனது மேசையில் இருப்பதாகவும், அவற்றைத் திறக்க வைக்க வேண்டாம் என்றும் கூறியிருந்ததை முதல்வர் விஜய் நினைவுபடுத்தினார்.
“அதைத் திறப்பதற்கு முன்பு சாம்பிள் மட்டும் காட்டுகிறேன்” என்று கூறிய அவர், தொடர்ந்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் வாசிக்கத் தொடங்கினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டிய விஜய்
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், கடந்த திமுக ஆட்சிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் உள்ள தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனக் கூறினார்.
மேலும், 1970களில் திமுக ஆட்சியின்போது வீராணம் திட்டத்துக்காக குழாய்கள் தயாரிக்கும் டெண்டர் தொடர்பான விவகாரத்தில் சர்க்காரியா கமிஷன் தனது இறுதி அறிக்கையில் முக்கிய தகவல்களை பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“2.5 சதவீதம் கமிஷன் கேட்டதாக அறிக்கையில் உள்ளது”
சுமார் 80 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், டெண்டர் பெறுவதற்கு 2.5 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும், அப்போது சுமார் ரூ.40 லட்சம் கமிஷன் பெறப்பட்டதாக விசாரணை கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“EMI கட்டுவது போல இன்ஸ்டால்மென்டில் லஞ்சம்”
இந்த விவகாரத்தை 2009ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எடுத்துப் பேசியதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டார். மேலும், சர்க்காரியா கமிஷன் குறிப்பிட்டுள்ளபடி, 1970 முதல் 1974ஆம் ஆண்டு வரை ஏழு தவணைகளில் ரூ.27 லட்சம் கையூட்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனை விமர்சித்த முதல்வர் விஜய், “லோனுக்கு EMI கட்டுவது போல இன்ஸ்டால்மென்டில் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார். சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய் பேசியதால், சட்டப்பேரவையில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.
