இந்தியாவில் இப்போது, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பல குடும்பங்களுக்கு மாதாந்திரக் கடன் தவணைகள் (EMI) பெரும் சுமையாக மாறியுள்ளன. இதனால் அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் மிஞ்சாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கடன் தீர்வு தளமான ‘எக்ஸ்பெர்ட் பேனல்’ நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தத் தளத்தை நாடிய கடன் வாங்கியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடனில் சிக்கியிருப்பதற்கான முக்கியக் காரணங்கள்!
ஆய்வில் பங்கேற்ற துயரமடைந்த கடன் வாங்குபவர்களில் 60 சதவீதப் பேர், தங்கள் மாதாந்திரக் கடன் தவணைகள் குடும்பத்தின் மொத்த மாத வருமானத்திற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 40 சதவீதப் பேர் ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க, புதிதாகக் கடன் வாங்குவதாகவோ அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாகவோ ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவர்களைக் கடனிலிருந்து மீள முடியாத ஒரு சுழலில் தள்ளியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவச் செலவுகள் மற்றும் வேலை இழப்பே முக்கியக் காரணம்!
விளம்பர ஆடம்பரச் செலவுகளுக்காகத்தான் மக்கள் கடன் வாங்குவதாகப் பரவலாக நிலவும் எண்ணத்திற்கு மாறாக, தவிர்க்க முடியாத அவசியச் செலவுகளுக்காகவே பெரும்பாலோர் கடன் வாங்கியுள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. சுமார் 26 சதவீதம் கடன் வாங்குதலுக்கு முக்கியக் காரணமாக மருத்துவச் செலவுகள் உள்ளன. அதேபோல, குடும்ப மற்றும் தனிப்பட்ட செலவுகளும் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. திருமணம் மற்றும் கல்வி போன்றவற்றுக்கு 22 சதவீதப் பேர் கடன் வாங்கியுள்ளனர்.
அதேபோல, சுமார் 18 சதவீதப் பேர் வேலை இழப்பு மற்றும் வணிகச் சவால்கள் காரணமாகக் கடன் பெற்றுள்ளனர். மேலும், 15 சதவீதப் பேர் சாதாரணக் குடும்பத் தேவைகளுக்காகக் கடன் வாங்கியுள்ளனர். அதிகப்படியான செலவுகளை விட, எதிர்பாராத நிதி அதிர்ச்சிகளே பல குடும்பங்களைக் கடனில் தள்ளுவதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடன் தவணை செலுத்துவதில் சிக்கல்!
கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் திணறுபவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேலை இழப்பு அல்லது சம்பளக் குறைப்பைக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர். அதேபோல, 28 சதவீதப் பேர் வருமானத்துடன் ஒப்பிடும்போது கடன் தவணைச் சுமை மிக அதிகமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 19 சதவீதப் பேர் பல கடன்களை வாங்கியதையும், அதிகப்படியான கடனையும் காரணமாகக் கூறியுள்ளனர்.
கடன் வாங்கியோர் மீது நடவடிக்கைகள்!
கடனிலிருந்து மீள்வதற்காகஉதவி கோரும்போது, சுமார் 60 சதவீத கடன் வாங்கியவர்கள் குறைந்தபட்சத் தொகையை மட்டுமே செலுத்தி வந்தனர் அல்லது தவணைகளைக் முற்றிலுமாக நிறுத்தியிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. ஐந்தில் ஒருவருக்கு ஏற்கனவே கடன் வழங்குநர்களிடமிருந்து சட்டப்பூர்வ நோட்டீஸ்கள் வந்துள்ளன. கடன் வாங்கியவர்கள் ஏற்கனவே நிதிச் சிக்கலில் தத்தளிக்கும் நிலையில், ஆக்கிரமிப்புடன் கூடிய கடன் வசூல் முயற்சிகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
துன்புறுத்தல்களும் மிரட்டல்களும்!
இந்த ஆய்வில், சுமார் 35 சதவீத கடன் வாங்கியவர்கள் ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல, 17 சதவீதப் பேர் வசூல் முகவர்களின் மூலமாக அவதூறான அழைப்புகள், மிரட்டல்கள் மற்றும் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தும் செயல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த முடிவுகள் குறித்துப் பேசிய ‘எக்ஸ்பெர்ட் பேனல்’ அமைப்பின் இயக்குநர் அனுராக் மெஹ்ரா கூறுகையில், இந்தியாவின் கடன் பிரச்சினை என்பது தவணை செலுத்தத் தவறுவது மட்டுமல்லாமல், மக்களின் தன்மானம், மன அமைதி மற்றும் சில சமயங்களில் வாழும் ஆசையையே இழக்கச் செய்யும் அளவிற்கு மோசமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடன் வாங்குபவர்களை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அதேவேளையில், முறையான வசூல் முயற்சிகளை உறுதி செய்யும் கட்டமைக்கப்பட்ட கடன் தீர்வு வழிமுறைகளை கடன் வழங்குநர்கள், ஒழுங்குமுறை ஆணையர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
