தொழிலாளர் வைப்பு நிதி (EPF) கணக்குகளில் ரூ. 9,330.56 கோடி உரிமை கோரப்படாமல், முடங்கிய நிலையில் (Inoperative Accounts) கிடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே இந்த விவரங்களை வெளியிட்டார்.
முடங்கிய கணக்கு (Inoperative Account) என்றால் என்ன?
ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தரமாக வெளிநாடு சென்றுவிட்ட பிறகு அல்லது இறந்துவிட்ட பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) எந்தவொரு தொகையும் (Contribution) அந்தப் பணிக்கொடை கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லை என்றால், அது “முடங்கிய கணக்கு” என வகைப்படுத்தப்படும்.
உங்கள் வயது 58 ஆகும் வரை மட்டுமே இந்த வைப்பு நிதி கணக்குகளுக்கு அரசு வட்டி வழங்கும். 58 வயதிற்குப் பிறகு கணக்கில் பணம் இருந்தாலும் வட்டி கிடைக்காது.
உங்கள் கணக்கு முடங்கிப்போயிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து வேறு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பழைய இ.பி.எஃப். கணக்கில் உள்ள பணத்தை, இப்போது பணியாற்றும் புதிய இ.பி.எஃப். கணக்கிற்கு ஆன்லைன் (Online) அல்லது ஆஃப்லைன் (Offline) மூலமாக சுலபமாக மாற்றிக் கொள்ளலாம் (Transfer).
ஓய்வு பெற்றவர்கள் அல்லது வேலையை நிறுத்தியவர்கள் இ.பி.எஃப்.ஓ. விதிகளின்படி, உங்கள் நிலுவைத் தொகையை உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக திரும்பப் பெறலாம் (Withdrawal).
இ.பி.எஸ். ஓய்வூதியத் தொகைக்கு காலக்கெடு உண்டா?
தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) குறித்து விளக்கமளித்த அமைச்சர், ஓய்வூதிய நிதி என்பது ஒரு கூட்டு நிதியாகும். இதில் ஓய்வூதியம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற எந்தவித காலக்கெடுவும் இல்லை.
தகுதியான உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் இதற்கான கோரிக்கையை (Claim) சமர்ப்பித்து, தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இப்போதே செக் செய்யுங்கள். உங்களுடைய பழைய இ.பி.எஃப். கணக்கில் யு.ஏ.என். எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து, உங்கள் பணத்தை உடனடியாக மீட்க விண்ணப்பியுங்கள்!
