மேகாலயா மாநிலத்தில் மின்சார வாகனப் ( EV ) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான மின்சார வாகனக் கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்கொள்கையின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ரூ. 25,000 மானியமும், முழுமையான பதிவுக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மின்துறை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள்!
மாநிலத்தின் மின்துறையை வலுப்படுத்த பல முக்கிய முடிவுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மின் உற்பத்தித்துறைக்கான தலைமைத் தொழில்நுட்ப ஆலோசகர் நியமனம் மற்றும் ஒரு முக்கிய மின்கடத்துத் திட்டத்திற்கான நில இழப்பீட்டுத் தொகையாக ரூ. 22.37 கோடி வழங்குவது ஆகியவை அடங்கும்.
5,000க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள்!
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் மூத்த அமைச்சர் மார்கஸ் மராக் மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை மற்றும் பதிவுக் கட்டணத் தள்ளுபடி வழங்குவதன் மூலம் தூய்மையான போக்குவரத்து முறைக்கு மாறுவதை புதிய கொள்கை துரிதப்படுத்தும் என்றார். தற்போது மாநிலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இக்கொள்கை முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களுக்கும் சலுகைகள்!
புதிய மின்சார வாகனக் கொள்கை 2026-ன் கீழ், எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கும் மானியங்கள் மற்றும் முழுமையான பதிவுக் கட்டண விலக்கு கிடைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பிடத்தக்க வகையில், தலைநகர் டெல்லியில் கடந்த ஜூலை 1 முதல் புதிய மின்சார வாகனக் கொள்கை அமலில் உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை படிப்படியாகக் குறைத்து, அவற்றுக்குப் பதிலாக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த டெல்லி அரசு இக்கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. டெல்லி அரசு மின்சார வாகனம் வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.
சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு!
டெல்லியில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 30,000 வரையிலும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 50,000 வரையிலும், எலக்ட்ரிக் லாரிகளுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ரூ. 30 லட்சம் வரை விலைமதிப்புள்ள மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான மானியங்களை நீட்டிக்கும் வகையில், பிஎம் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தின் கீழ் மத்திய அரசு காலக்கெடு மற்றும் தகுதி வரம்புகளை சமீபத்தில் மாற்றியமைத்தது. இந்த கட்டமைப்பு, மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளிக்கிறது. இதன் மூலம், காலப்போக்கில் மானியங்களைச் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே, மின்சார வாகனங்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வருவதை ஆதரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜூலை 31 வரை பதிவு செய்யப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள் இனி மானியங்களைப் பெறத் தகுதியுடையவை ஆகும். அதேசமயம், இ-ரிக்சாக்கள் மற்றும் இ-கார்ட்டுகள் உள்ளிட்ட மின்சார மூன்று சக்கர வாகனங்கள் 2028 மார்ச் 31 வரை மானியங்களைப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிதி வரம்பிற்கு உட்பட்டது என்பதால் ஒதுக்கப்பட்ட நிதி தீரும் வரை அல்லது திட்டத்தின் இறுதித் தேதி எட்டப்படும் வரை மட்டுமே இதன் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
