1.3 கோடி ஆண்டுகள் ஓல்ட்: 245 கி.மீ நீளம்… பூமிக்கு அடியில் உப்பால் உருவான 9 மாடி உலகம்

சாதாரணமாக பார்க்கும் போது இது ஏதோ நவீன ஷாப்பிங் மால் போலத் தோன்றலாம். ஆனால், இது நிலத்தடிக்கு அடியில் முற்றிலும் உப்பினால் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட நகரம் ஆகும். போலந்தின் க்ராகோவ் (Krakow) நகருக்கு அருகே அமைந்துள்ள ‘வியேலிச்கா உப்புச் சுரங்கம்’ (Wieliczka Salt Mine) 327 மீட்டர் ஆழத்தில், 9 நிலைகளாக 245 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு விரிந்துள்ள உலகின் மிக விசித்திரமான மற்றும் அழகான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும்.

வெறும் ரூ.386-க்கு இவ்வளவு லக்சுவரியா? இந்தியாவை பார்த்து ஐரோப்பா வெட்கப்படணும்; மிரண்டு போன ஃபாரினர்

1.3 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அதிசயம்

சுமார் 1.35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த கடல் நீர், புவித் தட்டுகளின் நகர்வால் வற்றியபோது கார்பேத்தியன் மலைத்தொடர் பகுதியில் மிகப்பெரிய உப்புப் படிமங்கள் உருவாயின. கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் இங்குள்ள இயல்பான உப்பு நீரைக் காய்ச்சி உணவிற்காக உப்பு தயாரித்துள்ளனர். 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் நீர்நிலைகள் வற்றத் தொடங்கியதும், நிலத்தைத் தோண்டி ஆழமான கிணறுகளை அமைக்கத் தொடங்கினர்.

14-ஆம் நூற்றாண்டில் போலந்தின் பேரரசர் காசிமிர் (Casimir III) காலத்தில் இது அரசாங்கத்தின் முக்கிய சொத்தாக மாறத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் நாட்டின் அரச கருவூல வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஒரு உப்புச் சுரங்கத்திலிருந்தே கிடைத்தது.

இரண்டாம் உலகப்போரின் ரகசிய தொழிற்சாலை

இரண்டாம் உலகப்போரின் போது, இந்த ஆழமான நிலத்தடிச் சுரங்கம் ஜெர்மனியால் போர் விமானங்களின் பாகங்களைத் தயாரிக்கும் ரகசியப் பட்டறையாகப் பயன்படுத்தப்பட்டது. அருகில் இருந்த செறிவு முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட போர்க் கைதிகள் இங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களுடன் பேசக் கூட அனுமதி இன்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

நிலத்தடிக்கு அடியில் தேவாலயங்கள் மற்றும் கலைப் படைப்புகள்

இந்தச் சுரங்கத்தின் ஆகச்சிறந்த அம்சம், அங்கிருக்கும் கலைப்படைப்புகள் ஆகும். சுரங்கத் தொழிலாளர்களே உப்பைக் குடைந்து பல பிரம்மாண்ட அரங்கங்களையும் தேவாலயங்களையும் உருவாக்கியுள்ளனர்.

புனித கிங்கா தேவாலயம் (Chapel of St Kinga)

தரைமட்டத்திலிருந்து 101 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்தத் தேவாலயம், 67 ஆண்டுகள் உழைப்பில் முற்றிலும் உப்பினால் செதுக்கப்பட்டது. அங்குள்ள பிரம்மாண்ட விளக்குகள், பலிபீடங்கள், லியோனார்டோ டா வின்சியின் ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தின் உப்புச் செதுக்கல் மற்றும் இரண்டாம் ஜான் பால் போப் அவர்களின் சிலை என அனைத்துமே உப்பினால் ஆனவை.

சுற்றுலா பயணிகள்

புகழ்பெற்ற வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்நிகஸ், கவிஞர் கோதே போன்ற பலர் இங்கு விஜயம் செய்துள்ளனர். 1978-ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.

இன்றும் தொடரும் பயன்பாடு மற்றும் நவீன வசதிகள்

தரைக்கு அடியில் 450 அடி ஆழத்தில், சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்காகச் சிறப்பு உப்பு குகை மருத்துவ மையம் இயங்கி வருகிறது. 120 அடி உயரமுள்ள ஒரு நிலத்தடி அரங்கில் பங்கி ஜம்பிங் (Bungee jump) மற்றும் சூடான காற்று பலூன் சவாரிகள் வரை நடத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Source link