FASTag Local Pass,சுங்கச்சாவடியைப் பயன்படுத்தும் உள்ளூர் மக்கள் கவனத்துக்கு: நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் லோக்கல் பாஸ் – fastag local pass introduced as new toll regulations take effect from november 1st 2026

நவம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கு வருடாந்திர லோக்கல் பாஸ் திட்டம் அமலுக்கு வருகிறது. அதற்கான விதிமுறைகள் மற்றும் சலுகைகள் குறித்து இங்கே நீங்கள் பார்க்கலாம்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்காக நவம்பர் 1 முதல் புதிய வருடாந்திர உள்ளூர் பாஸை அறிமுகப்படுத்துகிறது. சுங்கச்சாவடியின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்தப் பாஸின் கட்டணம் ரூ. 1,500 அல்லது ரூ. 3,000 ஆக இருக்கும். ஒரே சுங்கச்சாவடியை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008-ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தகுதியுள்ள வாகன ஓட்டிகளுக்கு ஆண்டுதோறும் மாதாந்திர பாஸ் வாங்குவதை விட இந்த வருடாந்திர பாஸ் சுங்கக் கட்டணச் செலவைக் குறைக்க உதவும். இருப்பினும், இதன் முழுப் பலன் அவர்கள் எவ்வளவு அடிக்கடி பயணம் செய்கிறார்கள் மற்றும் எந்த சுங்கச்சாவதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்?

இந்தப் புதிய பாஸ், தாங்கள் சலுகை கோரும் சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் வணிக நோக்கமற்ற வாகனங்களின் உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் வாகனத்துடன் இணைக்கப்பட்ட செல்லுபடியாகும் ஃபாஸ்டாக்கை வைத்திருக்க வேண்டும். இந்தச் சலுகை பல சுங்கச்சாவடிகளில் இலவசப் பயணத்தை வழங்காமல் குறிப்பிட்ட அந்த ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டுமே பொருந்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்ற இடங்களுக்குரிய கட்டணங்களை தனியாகக் செலுத்த வேண்டியிருக்கும்.

உள்ளூர் பாஸ் கட்டணம் எவ்வளவு?

சுங்கச்சாவடியானது நகராட்சி அல்லது உள்ளூர் நகர்ப்புற எல்லைக்குள் உள்ளதா அல்லது வெளியே உள்ளதா என்பதைப் பொறுத்து வருடாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சுங்கச் சாவடி நகர எல்லைக்கு வெளியே இருந்தால் ரூ. 1,500 ஆகவும், நகர எல்லைக்குள் இருந்தால் ரூ. 3,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ. 360 ஆகும். இது 12 மாதங்களுக்கு மொத்தம் ரூ. 4,320 ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது, ரூ. 1,500 வருடாந்திர பாஸ் மூலம் நீங்கள் ரூ. 2,820 வரை சேமிக்கலாம். அதேபோல, ரூ. 3,000 பாஸ் மூலம் ஆண்டு செலவை ரூ. 1,320 வரை குறைக்கலாம்.

உள்ளூர் பாஸ் எங்கு செல்லுபடியாகும்?

இந்த பாஸ் எந்த சுங்கச்சாவடிக்கு வழங்கப்படுகிறதோ அங்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் மூடப்பட்ட பயனர் கட்டண முறை (Closed user fee collection system) செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச்சாலைகளில் இது கிடைக்காது. பல சுங்கச்சாவடிகள் அல்லது மூடப்பட்ட விரைவுச்சாலைகள் வழியாக வழக்கமாகப் பயணம் செய்யும் நபர்களுக்கு இந்த விதிமுறை மிக முக்கியமானது. அவர்களின் வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிக் கட்டணங்களையும் இந்த வருடாந்திர பாஸ் தானாகவே ஈடுகட்டாது.

வாகன ஓட்டிகள் சரிபார்க்க வேண்டியது என்ன?

தங்களின் குடியிருப்பு 20 கி.மீ தகுதி எல்லைக்குள் வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஃபாஸ்டாக் செயலில் உள்ளதா என்றும், சரியான வாகன பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். முகவரிக்கான சான்றினை தயாராக வைத்திருக்க வேண்டும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அல்லது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்தப் புதிய பாஸ் தகுதியுள்ள உள்ளூர் பயணிகளுக்கு ஒரு வசதியான ஆண்டு கட்டணத் தேர்வை வழங்குகிறது. இதன் உண்மையான பலன் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி , பொருந்தக்கூடிய கட்டணம் மற்றும் வாகனம் அதைக் கடந்து செல்லும் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.

Source link