ganesh Chaturthi 2026 worship for wealth விநாயகர் சதுர்த்தி 2026 : ராஜயோகம் தேடி வர விநாயகரை இப்படி வழிபடுங்க

விநாயகர் சதுர்த்தி என்பது முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. புராணங்களின் படி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சதுர்த்தி திதி, விநாயகர் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. விநாயகர் மிகவும் எமியைான தெய்வம் என்பதால் மரத்தடி, குளக்கரை, சாலையோரங்களிலும் கூட வீற்றிருந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இவரை வழிபடுவதும் மிகவும் எளிமையானது. ஒரே ஒரு அருகம்புல் சாற்றி, தோப்புக்கரணம் போட்டு விநாயகரிடம் மனதார வேண்டிக் கொண்டாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அருளை வழங்குவார்.

தனக்கு மேலான ஒரு தலைவனோ, தெய்வமோ இல்லாதவராக திகழும் விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி தினம் 2026ம் ஆண்டில் செப்டம்பர் 14ம் தேதி திங்கட்கிழமையன்று வருகிறது. இந்த நாளில் விநாயகரை எப்படி வழிபட்டால் விநாயகரின் அருளையும், ராஜயோகம் தேடி வருவதற்கான வாய்ப்பையும் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்களும் வழிபட்டு பாருங்கள். விநாயகரின் அருளால் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.

விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய எளிய வழிபாடு :

– விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தயாராக வேண்டும்.

– இந்த நாளில் ரசாயனங்கள் கலந்த விநாயகர் சிலைக்கு பதிலாக சுத்தமான களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே வாங்கி வழிபட வேண்டும். முடிந்தால் நம்முடைய கைகளாலேயே விநாயகரின் திருவுருவத்தை செய்து வைத்து, வணங்குவது சிறப்புக்குரியதாகும்.

– விநாயகரின் துதிக்கை இடது புறமாக இருக்கும் படியான விநாயகர் சிலையே வீட்டில் வைத்து வழிபடுவதற்கு ஏற்றதாகும்.

– அதே போல் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கும் விநாயகர் சிலையையே வீட்டில் பிரதிஷ்டை செய்து, வழிபட வேண்டும்.

– ஒரு இலையில் சிறிது அருகம்புல் மற்றும் கொழுக்கட்டை அல்லது மோதகம் ஆகியவற்றை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

– வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் போது எப்போதும் தனியாக வைக்கக் கூடாது. சிவன்-பார்வதி சிலை அல்லது படங்களுடன் சேர்த்தோ அல்லது லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியின் படத்துடன் சேர்த்து தான் வைத்து வழிபட வேண்டும்.

– விநாயகர் வழிபாட்டின் போது கண்டிப்பாக மஞ்சளால் பிடிக்கப்பட்ட விநாயகர் பிடித்து வைத்து வழிபட வேண்டும்.

– விநாயகரின் பாதத்தில் வெற்றிலை பாக்கு சமர்பித்து, அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட வேண்டும்.

இந்த முறையில் விநாயகர் சதுர்த்தி அன்று எளிய முறையில் வழிபட்டால் விநாயகரின் அருளால் தடைகள், துன்பங்கள் விலகி, செல்வ வளம் அதிகரிக்கும். ராஜயோகம் தேடி வரும் என சொல்லப்படுகிறது. காரணம் விநாயகர் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே மகாலட்சுமியுடன் தொடர்புடையது என்பதால் இந்த எளிய வழிபாடு, பொருளாதாரத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை தரும் என நம்பப்படுகிறது.

விநாயகர் வழிபாட்டு பொருட்களும், பலன்களும் :

1. களிமண் விநாயகர் – களிமண் என்பது பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியதாகும். பூமாதேவி மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகும். களிமண் விநாயகர், நம்முடைய வீட்டிலும், வாழ்விலும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, அதை நாம் ஆற்றில் கரைக்கும் போது, நம்முடன் இருந்த கஷ்டங்களும் தண்ணீரில் கரைந்து விடும் என நம்பப்படுகிறது.

2. மஞ்சள் விநாயகர் – மஞ்சள் மங்களத்தின் அடையாளம். இது நவகிரகங்களில் குரு பகவானுக்குரியதாகும். மங்கள காரியங்கள் மட்டுமல்ல பொன், பொருள் சேர்வதற்கும் குரு பகவானின் அருள் நிச்சயம் தேவை.

3. அருகம்புல் – அருகம்புல், தடைகளை நீக்கி வெற்றியை தருவதுடன், மன அமைதியை தரக் கூடியதாகும்.

4. மகாலட்சுமி படம் – சகல விதமான ஐஸ்வர்யங்களையும் தரக் கூடியது.

5. வெற்றிலை – மங்கள பொருள், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. வெற்றியை தரக் கூடியது.

Source link