வரும் வாரம் நிறைய IPO-க்கள் வருகின்றன. அதில் நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் ஒரு நிமிடம் இதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் முடிவெடுக்கலாம். இந்த முக்கியமான விஷயங்களைப் பார்க்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!
அடுத்த வாரம் IPO (ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுகள்) முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறப்பான வாரமாக அமையவுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில் மொத்தம் 11 IPO-க்கள் சந்தைக்கு வரவுள்ளன. இதில் Rentomojo, Pranav Constructions மற்றும் Veegaland Developers போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும். செப்டம்பர் மாதத்தில் சுமார் ரூ. 20,000 கோடி முதல் ரூ. 25,000 கோடி வரையிலான மதிப்புள்ள பொதுப் பங்கு வெளியீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான IPO-க்கள் வருகின்றன என்பதற்காக, முதலீட்டாளர்கள் அனைத்து IPO-க்களிலும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. எந்தவொரு IPO-விலும் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
அனைத்து IPO-க்களிலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை!
குறுகிய காலத்தில் பல IPO-க்கள் வரும்போது குறைந்தபட்சம் ஒன்றிலாவது பங்குகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் முதலீட்டாளர்கள் அனைத்து வெளியீடுகளிலும் விண்ணப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்த அணுகுமுறை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீண்ட கால முதலீட்டாளர்கள் IPO-க்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதற்காக மட்டும் அவசரப்பட்டு முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல, IPO-க்களைப் பட்டியலிடப்படும் நாளிலேயே (listing day) லாபம் ஈட்டும் வழியாக மட்டுமே பார்க்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு IPO-வில் முதலீடு செய்வது என்பது மற்ற எந்தவொரு பங்குச் சந்தை முதலீட்டைப் போன்றதே ஆகும். எனவே, அந்த நிறுவனத்தின் வணிகம், வருவாய் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.
நிறுவனத்தின் நிதி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்!
ஒரு IPO-வில் முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் ‘Red Herring Prospectus’ (RHP) எனப்படும் வரைவுத் தகவல் அறிக்கையைப் படிப்பது முக்கியம். இது நிறுவனத்தால் தாக்கல் செய்யப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இதில் நிறுவனத்தின் வணிகம், நிதிச் செயல்பாடு, அபாயங்கள், நிறுவனத்தை ஊக்குவிப்பவர்கள் (promoters) மற்றும் IPO மூலம் திரட்டப்படும் நிதியின் பயன்பாடு குறித்த முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், நிறுவனத்தின் லாபம், விற்பனை, கடன் மற்றும் பணப்புழக்கம் (cash flow) ஆகியவற்றையும் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
IPO-வை வெளியிடுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!
ஒரு நிறுவனம் ஏன் IPO மூலம் நிதி திரட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். சில நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் புதிய திட்டங்களுக்கு நிதியளிக்கவும் நிதி திரட்டுகின்றன. அதே சமயம் சில நிறுவனங்கள் தங்கள் கடனை அடைக்க IPO-வை வெளியிடுகின்றன. சில நேரங்களில் ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் அல்லது நிறுவனத்தை உருவாக்கியவர்கள் (promoters) தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவதற்கும் IPO-வைப் பயன்படுத்துகின்றனர். IPO மூலம் திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதி வணிக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவிருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், நிறுவனம் கடனை அடைப்பதற்காக நிதி திரட்டினால் முதலீட்டாளர்கள் அதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
மதிப்பீட்டையும் (Valuation) கவனத்தில் கொள்ள வேண்டும்!
ஒரு நல்ல நிறுவனத்தின் IPO-வாக இருந்தாலும் அதன் மதிப்பீடு மிக அதிகமாக இருந்தால், முதலீட்டு அபாயம் அதிகரிக்கலாம். எனவே, IPO விலையை நிறுவனத்தின் லாபம், வணிகம் மற்றும் அதே துறையில் உள்ள பிற நிறுவனங்களின் நிலவரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நிறுவனத்தின் பெயர் அல்லது சந்தையில் நிலவும் பரபரப்பை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கக் கூடாது.
IPO மூலம் திரட்டப்படும் பணம் எங்கே செல்லும்?
முதலீட்டாளர்கள் நிறுவனத்தை உருவாக்கியவர்களின் (promoters) கடந்தகால செயல்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். IPO மூலம் கிடைக்கும் நிதி நிறுவனத்தின் வணிகத்தை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படுமா அல்லது ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவார்களா என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். வெளியீட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான ‘விற்பனைக்கான சலுகை’ (OFS) பகுதி இருந்தால் இந்த அம்சத்தையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.
கிரே மார்க்கெட் பிரீமியம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
IPO-வின் ‘கிரே மார்க்கெட் பிரீமியம்’ (GMP) அல்லது ஆரம்பகால சந்தா (subscription) எண்ணிக்கையை மட்டுமே முதலீட்டுக்கான முக்கிய அளவுகோலாகக் கொள்ளக்கூடாது. GMP விரைவாக மாறக்கூடியது; அது நிறுவனத்தின் நீண்டகால செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்காது. அதேபோல, அதிக சந்தாக்கள் (high subscriptions) என்பது அந்த நிறுவனத்தின் பங்கு நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும் என்று அர்த்தமல்ல.
நிறுவனத்தின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்!
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சில பலங்களும் பலவீனங்களும் இருக்கும். ஒரு IPO-வில் முதலீடு செய்வதற்கு முன் அதன் பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம். இதைச் செய்ய ‘SWOT பகுப்பாய்வு’ (SWOT analysis) முறையைப் பயன்படுத்தலாம். நிறுவனத்தின் RHP (Red Herring Prospectus) ஆவணத்தைத் தவிர, அதன் துறை சார்ந்த விவரங்கள், செய்திகள் மற்றும் நிபுணர்களின் அறிக்கைகளையும் கருத்தில் கொள்வது முக்கியம். வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சித் திறன் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். இது அதன் நீண்டகால முதலீட்டுத் திறனை மதிப்பிட உதவும்.
பிற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்!
ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை அதன் துறை சார்ந்த பிற நிறுவனங்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் முக்கியம். அந்தத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனத்தின் விற்பனை, லாபம் மற்றும் பிற நிதிசார் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருந்தால், அது ஒரு சாதகமான அறிகுறியாக அமையலாம். அதற்கு P/E விகிதம் (P/E Ratio), கடன்-பங்கு விகிதம் (Debt-to-Equity Ratio), லாப வரம்பு (Profit Margin), ஒரு பங்கிற்கான வருவாய் (EPS) மற்றும் பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் (ROE) போன்ற அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த அளவீடுகள IPO விலையைத் தீர்மானிக்கவும், அதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதை அறியவும் உதவும்.
Source link
