krishna about Mahalakshmi blessing secret மகாலட்சுமி கடாட்சம் யாருக்குக் கிடைக்கும்? ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன ரகசியம்

செல்வம் எல்லோருக்கும் கிடைக்கலாம். ஆனால் மகாலட்சுமியின் கடாட்சம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன் சிலரிடம் பணம் வந்தாலும் நிலைத்து நிற்பதில்லை? யாருக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சம் முழுவதுமாக கிடைக்கும், அதற்கு ஒரு மனிதனின் மனம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கிறார். இது அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் ஆகும்.

அர்ஜூனன் செய்த தானம் :

ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் நகர வீதிகளில் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உலா வந்தனர். அப்போது ஒரு வயதான முதியவர், மிகவும் ஏழ்மையான உடையுடன் அவர்கள் முன் வந்து, “ஐயா, தர்மம் செய்யுங்கள். என் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறது.” என்று கைகூப்பி வேண்டினார்.
அவரது நிலையைப் பார்த்த அர்ஜுனனின் மனம் உருகியது. உடனே அவர் தனது பையிலிருந்து ஆயிரம் பொற்காசுகளை எடுத்து முதியவரிடம் கொடுத்தார். அவ்வளவு பெரிய செல்வத்தை கையில் பார்த்த முதியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.”இறைவனே,இந்தச் செல்வம் எங்கள் குடும்பத்திற்கு பல ஆண்டுகள் போதும்.”என்று மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கிப் புறப்பட்டார். ஆனால் விதி வேறு ஒன்றை எழுதி வைத்திருந்தது. அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு திருடன், தனிமையான இடத்தில் அவரை வழிமறித்து, அனைத்து பொற்காசுகளையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான். முதியவர் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.

கை நழுவி போன செல்வம் :

சில நாட்களுக்குப் பிறகு அதே வழியாக மீண்டும் வந்த அர்ஜுனனும் கிருஷ்ணரும் அந்த முதியவரை சந்தித்தனர். நடந்த அனைத்தையும் முதியவர் வருத்தத்துடன் கூறினார். அவரது துயரத்தைக் கேட்ட அர்ஜுனன், இந்த முறை மிகவும் விலையுயர்ந்த ஒரு நவரத்தினக் கல்லை கொடுத்து, “இதையாவது மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்று கூறினார். முதியவர் அந்த நவரத்தினக் கல்லை மிகவும் கவனமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றார். யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பரணில் இருந்த ஒரு பழைய மண்பானைக்குள் அதை மறைத்து வைத்தார். அந்த ரகசியம் அவரது மனைவிக்குக் கூட தெரியவில்லை. மறுநாள் அவரது மனைவி வழக்கம்போல் அந்தப் பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். பானையை கழுவும் போது அதற்குள் இருந்த நவரத்தினக் கல் தெரியாமல் ஆற்றில் விழுந்துவிட்டது. அவளுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை.

முதியவர் வீட்டிற்கு வந்தபோது அந்தப் பானையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். “அதற்குள் வைத்திருந்த கல் எங்கே?” என்று கேட்டார். அப்போது தான் மனைவிக்கு உண்மை புரிந்தது. இருவரும் பதறிப்போய் ஆற்றங்கரைக்குச் சென்று பல மணி நேரம் தேடினார்கள். ஆனால் அந்த அரிய கல் எங்கும் கிடைக்கவில்லை. மீண்டும் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சில நாட்கள் கழித்து, கிருஷ்ணரும் அர்ஜுனனும் மீண்டும் அந்த முதியவரைச் சந்தித்தனர். மீண்டும் நடந்த அனைத்தையும் கேட்ட அர்ஜுனன் ஆச்சரியமடைந்தார். “கண்ணா, இவர் மிகவும் துரதிர்ஷ்டசாலி போல இருக்கிறாரே!” என்றார். அப்போது கிருஷ்ணர் புன்னகையுடன், “இந்த முறை அவருக்கு இரண்டு காசுகள் மட்டும் கொடு.” என்றார்.

எது விதியை மாற்றும்?

அர்ஜுனன் வியந்தாலும், கிருஷ்ணரின் வார்த்தையை ஏற்று இரண்டு காசுகளை முதியவரிடம் கொடுத்தார். முதியவர் அந்த இரண்டு காசுகளுடன் நடந்துச் சென்றார். அப்போது ஒரு மீனவர் உயிருடன் துடித்துக் கொண்டிருந்த இரண்டு மீன்களை விற்றுக் கொண்டிருந்தார். முதியவர் சிந்தித்தார். “இந்த இரண்டு காசுகளால் என் குடும்பத்தின் பசி கூட முழுமையாக தீராது. ஆனால் இந்த மீன்களை வாங்கி மீண்டும் ஆற்றில் விட்டால் இரண்டு உயிர்களாவது காப்பாற்றப்படும்.” என்று முடிவு செய்தார். அந்த இரண்டு மீன்களையும் வாங்கினார். ஒன்றை உடனே ஆற்றில் விட்டார். மற்றொரு மீனை ஆற்றில் விடுவதற்கு முன் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை முதியவர் கவனித்தார். மெதுவாக அதன் வாயைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் கண்கள் நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தில் உறைந்தன. சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட அதே நவரத்தினக் கல். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் உரக்கக் கத்தினார், “கிடைத்துவிட்டது! கிடைத்துவிட்டது!” என்று.

அதே நேரத்தில் அந்த வழியாக முன்பு பொற்காசுகளைத் திருடிய திருடன் வந்து கொண்டிருந்தான். முதியவரின் குரலைக் கேட்டவுடன் “என்னைப் பற்றித் தான் சொல்கிறார்!” என்று பயந்து ஓட முயன்றான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் உடனே அவனைப் பிடித்தனர்.
திருடனின் வீட்டைச் சோதனையிட்ட போது முதியவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொற்காசுகளும், பல திருட்டுப் பொருட்களும் கிடைத்தன. அவை அனைத்தும் உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. முதியவரும் தன் செல்வத்தை மீண்டும் பெற்றார்.இதையெல்லாம் பார்த்த அர்ஜுனன் ஆச்சரியத்துடன் கிருஷ்ணரிடம் கேட்டார். “கண்ணா! வாழ்க்கையில் இப்படிப்பட்ட அதிசயங்கள் எப்படி நடக்கின்றன?”

ஸ்ரீகிருஷ்ணர் கூறிய மகாலட்சுமியின் ரகசியம் :

கிருஷ்ணர் மெதுவாக புன்னகைத்து கூறினார். “அர்ஜுனா, முதல் முறை கிடைத்த செல்வத்தை, முதியவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டும் பயன்படுத்த நினைத்தார். இரண்டாவது முறை கிடைத்த நவரத்தினக் கல்லையும், தானும் பயன்படுத்தாமல், மற்றவருக்கும் பயன்படாமல் மறைத்து வைத்தார். ஆகவே அந்த இரண்டும் அவரிடம் நிலைக்கவில்லை. ஆனால் இந்த முறை அவரிடம் இருந்தது வெறும் இரண்டு காசுகள் மட்டுமே. அந்தச் சிறிய தொகையைக் கூட தனக்காக அல்லாமல், இன்னொரு உயிரைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டார். அந்தத் தன்னலமற்ற கருணை தான் அவருடைய விதியை மாற்றியது. மற்றவர்களின் நலனில் மகிழ்பவர்களிடமே மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாள்.” என்று விளக்கினார்.

Source link