Quote of the day: 'நம் திறமை மற்றவர்களின் விமர்சனத்தில் இல்லை!' – எலினோர் ரூஸ்வெல்ட் வாசகம்

வாழ்க்கைப் பயணத்தில் நாம் தினமும் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதில் சிலர் நம்மை உற்சாகப்படுத்துவார்கள், சிலர் தேவையில்லாமல் விமர்சிப்பார்கள்.

இதை முன் வைத்து அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினோர் ரூஸ்வெல்ட் (Eleanor Roosevelt) கூறிய ஒரு அற்புதமான பொன்மொழியைக் கூறியுள்ளார்.

“No one can make you feel inferior without your consent.”

“உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உங்களை தாழ்வாக உணரச் செய்ய முடியாது”

Quote of the day – எலினோர் ரூஸ்வெல்ட்

இது எவ்வளவு ஆழமான உண்மை என்பதை, நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் ஒரு அழகான நிகழ்வின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

கௌதம புத்தர் ஒருமுறை ஒரு கிராமத்தின் வழியே தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன், புத்தரைத் தரக்குறைவாகப் பேசினான். “நீ ஒரு ஏமாற்றுக்காரன், உனக்கு எதுவும் தெரியாது, மக்களை முட்டாளாக்குகிறாய்” என்று கடுமையாக விமர்சித்தான்.

ஆனால் புத்தரோ முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல், ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்குக் கோபம் இன்னும் அதிகமானது. கத்தி கத்திப் பார்த்துவிட்டு, அவனாகவே சோர்வடைந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

இதைப் பார்த்த சீடர்களுக்குப் பயங்கர கோபம். “குருவே, அவன் உங்களை அவ்வளவு கேவலமாகப் பேசினானே, நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? அவனுக்குப் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?” என்று கேட்டனர்.

அதற்கு புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டார், “ஒருவர் உனக்கு ஒரு பொருளைப் பரிசாகத் தருகிறார். நீ அதை வாங்க மறுத்துவிட்டால், அந்தப் பரிசு யாரிடம் இருக்கும்?”

சீடர்கள் உடனே, “பரிசு கொடுத்தவரிடமேதான் இருக்கும்” என்றார்கள்.

புத்தர் சொன்னார், “அதேதான் இப்போதும் நடந்தது. அவன் தன் கோபத்தையும், அவமானச் சொற்களையும் எனக்குப் பரிசாக அளித்தான். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அதனால் அந்தத் தாழ்வான வார்த்தைகள் அவனிடமே தங்கிவிட்டன”

Quote of the day - எலினோர் ரூஸ்வெல்ட்
Quote of the day – எலினோர் ரூஸ்வெல்ட்

எலினோர் ரூஸ்வெல்ட் சொன்னதும் இதைத்தான்! யாராவது நம்மைப் பார்த்து “உனக்கு அறிவில்லை, உனக்கு அழகு இல்லை, உன்னால் இந்தச் செயலைச் செய்ய முடியாது” என்று சொன்னால், அது அவர்கள் நமக்குக் கொடுக்கும் குப்பை.

அதை நாம் வாங்கிக் கொண்டால், அதாவது ‘ஆம், அவர்கள் சொல்வது சரிதான் போல, நமக்குத் திறமையில்லை’ என்று நம் மனதிற்குள் எண்ணத் தொடங்கினால் மட்டுமே தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவோம். நம்மை விமர்சிக்கும் உரிமையை மற்றவர்களிடம் நாம் கொடுக்காத வரை, அவர்களின் வார்த்தைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை.

நம் திறமை மற்றவர்களின் விமர்சனத்தில் இல்லை. நம் மதிப்பு மற்றவர்கள் கொடுக்கும் சான்றிதழில் இல்லை. அது நம் மனதிற்குள், நம் சுய நம்பிக்கையில் இருக்கிறது.

ஆகவே, நண்பர்களே! இனி யாராவது நம்மை மட்டம் தட்டிப் பேசினாலோ, நம்பிக்கையைக் குலைக்கும்படி நடந்துகொண்டாலோ நாம் சோர்வடையக் கூடாது.

Source link