krishna Jayanti 2026 கிருஷ்ண ஜெயந்தி Vs கோகுலாஷ்டமி Vs ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி: மூன்றிற்கும் என்ன வேறுபாடு?

கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, பாஞ்சராத்திர ஜெயந்தி என பல பெயர்களால் குறிப்பிடுவதால் எந்த பெயரால் இந்த பண்டிகையை அழைப்பது சரியான முறை என்று பலருக்கும் சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, பாஞ்சராத்திர ஜெயந்தி என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம், எதன் அடிப்படையில் இந்த பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன என்ற ஆன்மீக விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம். கிருஷ்ண ஜெயந்தியை எந்த பெயரால் அழைக்க வேண்டும் என்ற கேள்விக்கு விளக்கத்தை தெரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். புராணங்களின் படி, ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் தான் கிருஷ்ணர், தேவகி-வசுதேவரின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் என சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த தினம் என்பதால் இதை கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடுகிறோம். ஆனால் இந்த விழாவை கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது உள்ளிட்ட பல பெயர்களால் குறிப்பிடுகிறோம். இதனால் ஒரு பண்டிகைக்கு இத்தனை பெயர்களா? எதற்காக இத்தனை பெயர்கள்? இவை அனைத்திற்கும் ஒரே அர்த்தம் தானா அல்லது வித்தியாசங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் பலருக்கும் தோன்றலாம். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

பலரும் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, பாஞ்சராத்திர ஜெயந்தி ஆகிய அனைத்துமே ஒன்று தான் என சொல்லுவது உண்டு. ஆனால் இன்னும் சிலர், கிருஷ்ணர் சிறையில் அவதரித்த தினம் தான் கிருஷ்ண ஜெயந்தி என்றும், மறுநாள் அவர் கோகுலத்திற்கு சென்று சேர்ந்த நாள் தான் கோகுலாஷ்டமி என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் உண்மையில் மேலோட்டமாக பார்த்தால் இவை அனைத்துமே கிருஷ்ணரின் அவதார தினத்தை குறிக்கும் சொற்கள் தான். அதே சமயம் இவற்றிற்கு இடையே சில வேறுபாடுகள் உள்ளன.

கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமி வேறுபாடு :

கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி ஆகியவை ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுபவை. ஆனால் பாஞ்சராத்திர ஜெயந்தி என்பது ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படுவது ஆகும். அது மட்டுமல்ல, சைவ மரபை பின்பற்றி, சிவனை பிரதான தெய்வமாக வழிபடுபவர்கள் கோலாஷ்டமி என்று கொண்டாடுவார்கள். வைணவ மரபை பின்பற்றி பெருமாளை பிரதான தெய்வமாக வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்று கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

பாஞ்சராத்திர ஜெயந்தி என்றால் என்ன?

பெருமாளை பிரதான தெய்வமாக வழிபடுபவர்களுக்கு இரண்டு ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், மற்றொன்று பாஞ்சராத்ர ஆகமம். இவற்றில் வைகாசன ஆகமத்தை பின்பற்றுபவர்கள் அஷ்டமி திதியை அடிப்படையாக கொண்டும், பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றுபவர்கள் ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது வழக்கம். இவற்றில பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றுபவர், சூரிய உதயத்திற்கு பிறகு வரும் 2 நாழிகைகள் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து எந்த நாளில் அமைகிறதோ அந்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடுவார்கள். இதனால் இதை வைஷ்ணவ ஜெயந்தி என்றும், பாஞ்சராத்திர ஜெயந்தி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பாதம் போட காரணம்:

கண்ணன் கோகுலத்தில் இருந்த போது, கோபியர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி சாப்பிட்டதாக புராணங்களில் சொல்லப்படுகிறது. அப்படி அவர் திருடி சாப்பிடும் போது ஆங்காங்கே சிதறிய வெண்ணெய்யின் கண்ணனின் பாதம் பட்டு, வீடு முழுவதும் கண்ணனின் பாத சுவடுகள் படிந்தன. கண்ணன் திருடும் வெண்ணெய் என்பது மனிதர்களின் மனங்களில் இருக்கும் தீய குணங்களுக்கு சமமானதாக சொல்லப்படுகிறது. இதனால் நம்முடைய வீட்டிற்கும் கண்ணன் வந்து, நம்முடைய மனங்களில் இருக்கும் தீய எண்ணங்களை திருடி, அவரது அருளால் நம்முடைய மனதில் நல்ல எண்ணங்கள், மகிழ்ச்சி ஆகியவை ஏற்பட்டு, மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக கண்ணனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும் பழங்காலத்தில் வெண்ணெய்யால் கண்ணனின் பாத சுவடுகளை வரைவது வழக்கமாக இருந்தது. பிறகு காலப் போக்கில் அது அரிசி மாவினால் பாதம் வரையும் வழக்கமாக மாறி விட்டது. இதுவும் ஒரு புண்ணிய செயல் தான். அரிசி மாவினால் நாம் கண்ணனின் பாதங்களை வரையும் போது அவற்றை எறும்புகள் வந்து சாப்பிடும், இதனால் பல நூறு உயிர்களுக்கு அன்னதானம் அளித்த பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் நமக்கு இந்த வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

Source link