OMR – ECR புதிய இணைப்பு சாலை: சோழிங்கநல்லூர் டூ கோவளம் ரூட்- தமிழக அரசு டெண்டர் – tamil nadu govt calls tender for omr – ecr new link road between sholinganallur to kovalam

சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதற்கு 3 மாதங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடற்கரை காற்றுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் இடம் என்று கேட்டால் சட்டென ஈசிஆர் என்று சொல்லிவிடுவார்கள். இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்படியே கொஞ்சம் மேற்கு பக்கம் வந்தால் ஓ.எம்.ஆர் சாலை வந்துவிடும். இந்த வழித்தடத்தில் வரிசையாக ஐடி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஓ.எம்.ஆர், ஈசிஆர் என இரண்டு பகுதிகளும் நாள்தோறும் பரபரப்பாக இயங்கக் கூடியவை. ஆனால் இந்த பகுதிகளை இணைக்கும் சாலையில் தான் பெரிய சிக்கலே.

துரைப்பாக்கம், நீலாங்கரை தான் ஒரே வழி

சரியான இணைப்பு சாலைகள் இல்லாமல் குறுக்கும், நெடுக்குமாக மேடு பள்ளங்கள் நிறைந்த சிறிய சாலைகளில் பயணித்து கடக்க வேண்டியுள்ளது. துரைப்பாக்கம், நீலாங்கரை சாலை வழியாக தான் செல்ல வேண்டும். எனவே ஓ.எம்.ஆர் – ஈசிஆர் பகுதிகளை இணைக்க சாலை ஒன்றை கட்டமைக்க கடந்த பல ஆண்டுகளாகவே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைப்பது எப்படி? முழு தகவல் இதோ…

தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு

இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் தொடங்கி கோவளம் வரை புதிய சாலை அமைக்கப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் வகையில் 14.20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓ.எம்.ஆர் – ஈசிஆர் இணைப்பு சாலை- என்னென்ன பலன்கள்?

துரைப்பாக்கம், அக்கரை, கேளம்பாக்கம் பகுதிகளில் தினசரி ஐடி ஊழியர்களும், கடலோர குடியிருப்பு பகுதிகளில் வசிப்போரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் நேரடியாக செல்வதற்கு இணைப்பு சாலைகள் இல்லை. புதிய இணைப்பு சாலை வரும் போது நேரம் பெரிதும் குறையும். சுற்றி சுற்றி அலைய வேண்டியதில்லை. சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நாவலூர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சீரான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

சோழிங்கநல்லூர் – கோவளம் பகுதியில் உயரும் ரியல் எஸ்டேட்

புதிய இணைப்பு சாலை வந்துவிட்டால் போக்குவரத்து எளிதாகி விடும். எனவே இந்த பகுதிகளில் இடம் வாங்கவும், வீடு வாங்கவும் பலரும் ஆர்வம் காட்டுவர். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் கிடுகிடுவென உயரும். ஏற்கனவே சுற்றி சுற்றி பிளாட் போட்டு அப்பார்ட்மென்ட்களாக கட்டி வைத்துள்ளனர்.

இதில் எஞ்சியிருக்கும் வீடுகளும், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் தொடங்கினால் விரைவாக புக்கிங் செய்வதையும் பார்க்கலாம். ஓ.எம்.ஆர், ஈசிஆர் என இரண்டு பகுதிகளும் வெவ்வேறு வகைகளில் பொருளாதார பலன்களை அளித்து வருகின்றனர். எனவே இதன் இணைப்பு வளர்ச்சிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link