சமீபத்தில், தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதிய வரம்பை 15,000 ரூபாயில் இருந்து ரூ. 25,000 ரூபாயாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக் காலத்தில் லட்சக்கணக்கான பிஎஃப் ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான EPS ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலக் கோரிக்கை அடுத்த மாதம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில், ஊழியர்களுக்கான குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து ரூ. 7,500 ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளது. நவம்பர் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ள EPFO மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் இந்த குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. EPS ஓய்வூதியதாரர்கள் சங்கம் நீண்டகாலமாக ஓய்வூதியத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியமான 1,000 ரூபாயை ரூ. 7,500 ஆக உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
அதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெறும் 1,000 ரூபாயை வைத்துக் கொண்டு மாதாந்திரச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு சிறிய தொகையைக் கொண்டு முதியவர்களின் மருத்துவச் செலவுகளையோ அல்லது அன்றாடச் செலவுகளையோ ஈடுகட்ட முடியாது என்பதால், ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு EPS திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக நிர்ணயித்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஓய்வூதியதாரர்கள் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போதைய சூழலில், மருத்துவச் செலவுகளையும் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய 1,000 ரூபாய் போதுமானதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்துமாறும், அதனுடன் அகவிலைப்படியையும் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு சமீபத்தில் EPF திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கான கட்டாய ஊதிய வரம்பை மாதத்திற்கு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தது. இந்நிலையில், தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மத்திய அரசு இது தொடர்பான விதிகளை மறுஆய்வு செய்து வருவதாகவும், ஓய்வூதிய உயர்வு கோரிக்கை குறித்து சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
