பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க ஆன்லைன் கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்தும் பல நாட்களாகியும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலரிடம் இருக்கிறது. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஊழியர்கள் இத்தகைய பிரச்சனையைச் சந்திக்கின்றனர். சில சமயங்களில் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது சில வாரங்களுக்கு ‘செயல்முறையில் உள்ளது’ (under process) என்ற நிலையிலேயே நீடிக்கலாம். உங்கள் கணக்கில் உள்ள வாரிசுதாரர் (nominee) விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது காலாவதியான விவரங்களாக இருந்தாலோ உங்கள் கோரிக்கை முடக்கப்படலாம்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் EPFO அலுவலகத்திற்குச் செல்லவோ அல்லது யாரிடமும் அலைந்து திரியவோ தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி மூலம் வெறும் 5 நிமிடங்களில் நாமினி விவரங்களைப் புதுப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் பணம் , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவே சேமிக்கப்படுகிறது. வேலையில் சேர்ந்த பிறகு திருமணம், குழந்தை பிறப்பு அல்லது குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணைவது போன்ற பல மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழ்கின்றன.
உங்களுக்குத் திருமணமாகிவிட்ட நிலையிலும் உங்கள் பிஎஃப் கணக்கில் இன்னும் உங்கள் பெற்றோரின் பெயரே பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நீங்கள் யாரையும் வாரிசுதாரராக நியமிக்காமல் இருந்தாலோ கணினி அமைப்பு உங்கள் கோரிக்கையைத் தடுக்கலாம். எதிர்பாராத ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பிஎஃப் மற்றும் ஓய்வூதியப் பணத்தைப் பெற உங்கள் குடும்பத்தினர் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே, உங்கள் பிஎஃப் கணக்கில் வாரிசுதாரர் தகவல்களை எப்போதும் புதுப்பித்து வைத்திருப்பது மிக முக்கியம்.
EPFO இணையதளத்தில் அப்டேட் செய்வது எப்படி?
உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே வாரிசுதாரர் விவரங்களைப் புதுப்பிக்க, முதலில் புரவுசரில் EPFO என்று தேட வேண்டும். பின்னர், ‘ Member Unified Portal ‘ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் 12 இலக்க UAN எண், கடவுச்சொல் மற்றும் திரையில் காட்டப்படும் கேப்ட்சா (captcha) குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு உங்கள் தனிப்பட்ட டேஷ்போர்டு திறக்கும்.
e-nomination விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து குடும்ப விவரங்களை நிரப்ப வேண்டும்!
டாஷ்போர்டு திறந்த பிறகு மேல்புறத்தில் உள்ள மெனு பாரில் “Manage” (நிர்வகி) என்ற ஆப்சனை காண்பீர்கள். அதை கிளிக் செய்ய வேண்டும். அதிலிருந்து வரும் drop-down பெட்டியில் “e-nomination” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே திரையில் “குடும்பம் உள்ளதா?” (Having Family) என்பது போன்ற ஒரு கேள்வி தோன்றும். அதற்கு “Yes” (ஆம்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது, உங்கள் வாரிசுதாரரின் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் உங்களுடனான உறவுமுறை (மனைவி, மகன், மகள், தாய் அல்லது தந்தை போன்றவை) உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
அடுத்து, வாரிசுதாரரின் முழு முகவரியை உள்ளிட்டு அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை வாரிசுதாரராக நியமிக்க விரும்பினால், “Add Row” (வரிசையைச் சேர்) என்பதைக் கிளிக் செய்து மற்ற உறுப்பினரின் விவரங்களைச் சேர்க்கலாம். அனைத்து விவரங்களையும் நிரப்பிய பிறகு, “Save Family Details” (குடும்ப விவரங்களைச் சேமி) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
PF தொகையைத் தீர்மானித்து e-Sign செய்ய வேண்டும்!
அடுத்த கட்டத்தில், உங்கள் PF பங்கில் எவ்வளவு தொகையை ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் வழங்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். “Total Amount of Share” (பங்கின் மொத்த அளவு) என்ற கட்டத்தில் சதவீதத்தை உள்ளிட வேண்டும். ஒரே ஒரு வாரிசுதாரர் மட்டுமே இருந்தால், 100% என்று குறிப்பிட வேண்டும். இரண்டு வாரிசுதாரர்கள் இருதால் 50-50% அல்லது 60-40% என்ற விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர், “Save EPF e-Nomination” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே திரையில் “e-Sign Pending” ( என்று காட்டப்படும். அதற்கு அருகில் உள்ள சிறிய e-Sign ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு “Send OTP” என்பதைக் கிளிக் செய்தால் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும் (submit).
OTP சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே கோரிக்கை பரிசீலிக்கப்படும்!
OTP சமர்ப்பிக்கப்பட்டதும் திரையில் “Nomination Successful” (வாரிசுதாரர் நியமனம் வெற்றிகரமாக முடிந்தது) என்ற செய்தி தோன்றும். e-nomination செயல்முறை முடிந்ததும் உங்கள் பிஎஃப் கணக்கு முழுமையாகப் புதுப்பிக்கப்படும். அதன் பிறகு, நீங்கள் எப்போது பணம் எடுப்பதற்கோ அல்லது முன்பணத்திற்கோ (advance claim) விண்ணப்பித்தாலும், கணினி உங்கள் படிவத்தை உடனடியாகப் பரிசீலிக்கும். எந்தத் தடங்கலும் இல்லாமல் பிஎஃப் பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Source link
