தென்னிந்தியாவில் குறிப்பாக வைணவ மரப்பில் மிக முக்கியமான ஆன்மீக மாதமாக கருதப்படுவது புரட்டாசி மாதமாகும். இது பெருமாள் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான மாதமாகும். பெருமாள் வழிபாட்டிற்கு மட்டுமின்றி சக்தி வழிபாடு மற்றும் முன்னோர் வழிபாட்டிற்குரிய மாதமாகவும், பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்குரிய மிக அற்புதமான மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் எப்போது துவங்குகிறது, இந்த மாதத்தின் ஆன்மீக சிறப்பு என்ன, புரட்டாசி விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாதம் 2026 :
புரட்டாசி மாதப்பிறப்பு 2026 செப்டம்பர் 18 வெள்ளி புரட்டாசி மாதம் நிறைவு அக்டோபர் 17 சனி புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்டம்பர் 19 சனி
புரட்டாசி மாத சிறப்புகள் :
மகாவிஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றான வெங்கடேச பெருமாளை வழிபடுவதற்குரிய மாதம் புரட்டாசி மாதமாகும். பெருமாளின் அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த மங்களகரமான மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் இருந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கர்ம வினைகள் குறைவதற்காகவும், பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காகவும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான விழாவாகிய நவராத்திரி விழா கொண்டாடப்படுவது புரட்டாசி மாதத்தில் தான். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபட்டு, துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிபாடுகளை மேற்கொள்வது உண்டு. அதே போல் முன்னோர் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான மகாளய பட்சம் காலமும் புரட்டாசி மாதத்தில் தான் வருவது உண்டு.
புரட்டாசி விரதம் :
புரட்டாசி மாதம் முழுவதும் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் கடைபிடிப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் உபவாசமாக இருந்து பெருமாளை வழிபடுவார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வேண்டி விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபடலாம். புண்ணிய பலன்களை பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
புரட்டாசி விரத முறை :
1. புரட்டாசி மாதம் துவங்கியது முதல் நிறைவடையும் வரை தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பெருமாளை வழிபட வேண்டும்.
2. பெருமாளுக்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைத்து, துளசி படைத்து வழிபட வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் சாத்வீக உணவுகளாக எடுத்துக் கொண்டு, பெருமாளை வழிபடலாம்.
3. தினந்தோறும் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
4. பெருமாளின் திருநாமங்களையும், மந்திரங்களையும் சொல்லி வழிபட வேண்டும்.
5. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.
6. புரட்டாசி சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து விட்டு, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு விரதத்தை துவக்க வேண்டும்.
7. பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி, அவருக்கு விருப்பமான புளியோதரை, தயிர் சாதம், பாயசம், சர்க்கரை பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பகல் நேரத்தில் படையல் போடும் வழக்கம் இருப்பவர்கள் பெருமாளுக்கு இலை போட்டு தளிகை இட்டு வழிபடலாம்.
8. துளசி மாலைகள் சமர்பித்து, துளசி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
9. பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லி, நம்முடைய பிரார்த்தனைகளையும்,பெருமாளின் அருளையும் வேண்டி வழிபாடு செய்ய வேண்டும்.
10. மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
11. புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டிலேயே அல்லது கோவிலுக்கு சென்றோ பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபடலாம்.
