நமீபியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 348 ரன்களை குவித்த நிலையில், இறுதியில் மழை காரணமாக போட்டி தடைபட்டு, டிஎல்எஸ் முறையில், தென்னாப்பிரிக்க அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2ஆவது ஒருநாள் போட்டி துவங்கிய நிலையில், டாஸ் வென்ற நமீபியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஓபனர் கன்னோர் அபாரமாக செயல்பட்டு, 110 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 119 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், டோனி டி ஜோர்ஷி 79 (87), டிவோல்ட் பிரேவிஸ் 37 (30), ஏதன் போஷ் 29 (13) ஆகியோரும் சிறப்பாக ஆடியதால், தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 335/9 ரன்களை குவித்தது.
நமீபியா அணி பௌலர் ஜாக் பிரஸ்ஸல் 10 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ரூபின் ட்ரம்பிள்மேன் மற்றும் ஜான் பால்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய நமீபியா அணியில், முதல் மூன்று பேட்டர்களும் ரன்கள் எதையும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இதனால், நமீபியா அணி, முதல் ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து, கேப்டன் எராஸ்மஸ் அபாரமாக விளையாடி, 84 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 68 ரன்களை குவித்து, ஸ்கோரை உயர்த்தினார்.
மேலும், இறுதிக் கட்டத்தில் ஜான் பால்ட் 26 (51), ரூபின் ட்ரம்பிள்மேன் 30 (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். இருப்பினும், எந்த ஒரு பேட்டரும் பெரிய ஸ்கோரை அடிக்காததாலும், பெரிய பார்ட்னர்ஷிப்கள் இல்லாத காரணத்தினாலும், நமீபியா அணி, 41.5 ஓவர்களில் 178/10 ரன்களை எடுத்து, 157 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, இத்தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தனர்.
தென்னாப்பிரிக்க அணி ஓபனர் பௌலர் டுவைன் யான்சன் 9 ஓவர்களில் 31 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஏதன் போஷ் 7.5 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகள், முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றிருந்தபோது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நமீபியா அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய நமீபியா அணி, 20 ஓவர்களில் 163/9 ரன்களை எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 145/9 ரன்களை மட்டும் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதனைத் தொடர்ந்து, கடைசி லீக் போட்டியில், மீண்டும் இரு அணிகள் சந்தித்தபோது, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 228/4 ரன்களை எடுத்த நிலையில், நமீபிய அணியும் கடுமையாக போராடி, 217/3 ரன்களை எடுத்து, இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை சந்தித்தனர்.
